Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008
-------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

யுத்தத்தின் கரங்கள் ஊரூராகச் சனங்களை அப்புறப்படுத்தும் வலியினை விவரிக்கிறது கவிதை.

//யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன. //

அருமையான வரிகள்.

ஃபஹீமாஜஹான் சொன்னது…

மரத்தடிகளிலில் ஒன்றியிருக்கும் மக்களின் பரிதவிப்பையும்

சிதறிப் போகும் எதிர்காலத்திடம் கைவிடப் பட்ட பிள்ளைகளின் வாழ்வையும்

அரசியல் சூதாட்டத்தில் ஈடு வைக்கப் பட்டு மோசமாக வஞ்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் நிலைமையையும்

பிள்ளைகளின் மனதில் திணிக்கப் படும் எதிர்ப்பையும்

உணர்கிறோம்.

அரச ஊடகங்களும் நச்சைத் தானே மக்கள் மனங்களில் பரப்பிக் கொண்டுள்ளதன.
குடிமனைகளின் மீது குண்டுகளை வீசிவிட்டச் செல்லும் விமானங்கள் ஆயுதக் கிடங்குகளையும் போராளிகளின் நிலைகளையும் தாக்கிவிட்டுத் திரும்புவதாகத் தான் தினம் தினம் செய்திகள் பரப்பப் படுகின்றன.தினமும் 40-50 போராளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்(இனவாதம் அதிகமான ஊடகங்களில் செய்திவெளியிடப் படும் பொழுது அவர்களின் கடைவாயினூடாக இரத்தம் வழியும்) . அப்படிப் பார்த்தால் இப்போது வன்னியில் சனமே இருக்க முடியாது.

தெய்வம் நின்று கொல்லும்- எப்போது?

Theepachelvan சொன்னது…

இது றஞ்சனி மின்னஞ்சலூடாக அனுப்பிய கடிதம்


அன்பின் தீபச்செல்வன்,
அங்கு நடப்பவைகளை உங்கள் கவிதியினூடாக பார்க்கமுடிகிறது, நீங்கள் வரையும் ஓவியங்க்களும் நன்றாகவும் வலிகள் நிறைந்ததாயும் இருக்கிரது வாழ்த்துக்கள், ஓவியத்தில் இன்னும் நிறைய நேரம் செலவுசெய்தீர்களானால் இன்னும் அருமையான ஓவியங்களைத்தரலாம், சந்தோசமாக இருக்கிறது கவிதைகள் மட்டுமல்ல ஓவியத்திலும் ஆர்வம் உள்ளவரென்பதில், நிறையக்கீறுங்கள்,//யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது//

உண்மை ,எம் சிறுவர்களுக்கு அழகிய கனவுகள் மறந்து யுத்த விமானங்களும் ஓலமும் குருதியும் இறப்பும்தான் கனவில் வரும் கொடுமைகள் எவ்வளவுகாலம் நீடிக்கபோகிறது ..
வன்னியின் நிலமைகள் அகதியாக மக்கள் மரங்காளுக்கு கீழ்வாழும் நிலை வேதனையாக இருக்கிறது .

அன்புடன் றஞ்சினி

Theepachelvan சொன்னது…

அன்புள்ள
ரிஷான், பஹீமாஜஹான்,றஞ்சனி ஆகியோருக்கு
மிக்க நன்றி
உங்கள் உணர்வுகளுக்கும் கருத்துக்கும்.

தீபச்செல்வன்

த.அகிலன் சொன்னது…

வில நிறைந்த கவிதை தீபச்செல்வன். நான் முதல் முதலாக உனக்கு எழுதும் பின்னூட்டம் இது ..உண்மையிலே அற்புதமான அழும் மனசின் வரிகள் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கு இப்படி எழுதேல்லயே நான் எண்டு.. மற்றபடி துயரம் இதை எப்ப கடப்பது..

Theepachelvan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...