தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.
நள்ளிரவு அதிரக் கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.
தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும் சொற்களை
சூன்யப்பிரதேசத்தில் திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.
குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.
திசைகளை விழுங்கும் இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும் குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.
அதில்
குரல் பிடுங்கி எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.
இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.
கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும் நுளம்புகளை
பூனைகள் பிடித்துச் சாப்பிடுகின்றன.
தலைகளை பிடுங்கி எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள் எழும்பி பறக்கின்றன.
முழு யுத்தத்திற்கான பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.
வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.
குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
0
16.01.2008
இன்று இரவு ஏழு மணியுடன், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன், 2002இல் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்டசமாக விலகிக்கொள்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழ்மக்கள்மீதான பாரிய இன அழிப்புப் போர் ஒன்றையே இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இவ் இன அழிப்புப் போரை மேற்குலகம் மௌனத்தால் ஆதரிக்கிறது.
1 கருத்துகள்:
//16.01.2008 இன்று இரவு ஏழு மணியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திறிகும் இடையில் இருந்த-வெற்று வார்த்தையில் அடைக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ஒருதலைப்பட்டசமாக முறித்துக்கொள்கிறது. தமிழ்மக்கள்மீது பாரிய போர் ஒன்றை இலங்கை அரசு பிரகடனத்துடன் திணிக்கத்தொடங்குகிறது. இந்தப்போரினால் தமிழர்களுடன். அப்பாவி முஸ்லீம்மக்கள்,அப்பாவிசிங்களமக்கள் கூட பாதிக்கப்படப்போகிறார்கள். பங்கரவாதத்திற்கு எதிரானது என்ற போர்வையில் இந்தப்போரை மேற்குலகம் ஆதரிக்கிறது என்றே கருதுகிறோம்.//
நிர்க்கதி நிலையில் நாம் அனைவரும்.
ஒரு மனிதனுக்குப் பயந்து இன்னொருவன் ஓடி...
சக மனிதனையே சந்தேகங்கொள்ள வைத்து...
இயந்திரப் பிசாசுகளின் ஒவ்வொரு ஓசைகளுக்கும் அடிமனதில் ஆழப்பயங்கொண்டு...
என்று தீரும் இந்நிலை?
//வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.//
கவிதையை மேலும் ஆழப்படுத்துகிறது இவ்வரிகள்.
பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக