இனித் திரும்பாத சூரியனுக்காய்
நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்
மேலெறியப்படும் குண்டுகள்
தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற
வலயத்தில் மூளப்போகிற சண்டையில்
அவர்கள் நம்மிடம்
எதை எடுக்கப் போகின்றனர்?
துவக்கு மெல்ல புகுந்து
தின்கிறது இறப்பர் குடில்களை.
சிறிய ஆயுதங்களால்
போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்
இடையில் கனகரக ஆயுதங்கள்
அறிவுருத்தியபடி
உண்மையிலேயே
ஓய்ந்துபோயிருக்கிறதாவென நாம் அறிவோம்.
முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது
எம் வாழ்நிலம்.
போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது
பாதுகாப்பு வலயம்
ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து
சனங்கள் பார்த்திருக்கவே
இழுத்துச் செல்கிறது
ஐ.நாவின் அனுமதி கிடைத்தது
அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.
மெலிந்து போய்விட்ட சனங்கள்
அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.
இழந்து போக முடியாத
தேசம் பற்றிய கனவை நீயும் நானும்
மறக்க நிர்பந்திக்கப்படும் நடவடிக்கையில்
நீயும் நானும் எல்லாவற்றையும் பிரிந்து
துரத்தி அலைக்கப்படுகிறோம்.
வாழ்வுக்கான பெருங்கனவை
கூடிச் சிதைத்தனர்.
நாமோ கூடு கலைந்து திரிகிறோம்.
போரிட்டுச் சாகிறது பெருநிலம்
சடலங்களுடன் அள்ளுண்டு போகிறது
வளர்த்தெடுக்கப்பட்ட கனவு
முடிவு நெருங்கும் கடைசிக் களத்தில்
தொடங்கவிருக்கிறது அடுத்த போர்.
அம்மாவே உன்னைப் போலிருந்த
எனது நகரத்தை நான் பிரிந்தேன்
தங்கையே உன்னுடன் வளர்த்த
எனது கனவுகளை நான் இழந்தேன்
அவர்கள்
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பிரித்தனர்
தூரத்தே உழல்கிறது எனது தெரு.
வழியற்றிருக்கிறது போர்க்களம்
கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்
மூடுப்படாத விழிகளுடன்.
சண்டை மூண்ட பாதுகாப்பு வலயத்தில்
எப்படி உன்னை பதுக்கி
காத்துக்கொள்ளுவாய்?
அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்
துடிக்கிற மனதை எதற்குள் பொத்தி வைப்பாய்?
0
07.04.2009
தீபச்செல்வன்
1 கருத்துகள்:
தங்களின் 'பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்' படித்து மனம் அமைதி இழந்துவிட்டது. தங்கள் வலைப்பதிவை தேடி படித்ததில் அந்ததாக்கம் அதிகமாகிறது.
மனதில் வலியோடு பிரார்த்தித்து நிற்கிறேன். பிஞ்சு குழந்தைகள் குழிவிட்டு எழுந்து விளையாடும் நாள் காண மனதில் வலியோடு பிரார்த்தித்து நிற்கிறேன்.
கருத்துரையிடுக