o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது
கால்கள் இறங்காமல்
எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி
அவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும்
நடந்து செல்லுகிறாள்.
பதுங்குகுழி உடைந்து
மண் விழுகையில்
தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள்.
கால்களை ஷெல் கிழித்த பொழுது
தனது கண்கள் குருதியில்
நனைத்து கிடந்தன என்று கூறியபடி
சக்கரத்தை உருட்டுகிறாள்.
எனது கால்கள் இல்லாததைப்போலிருக்கின்றன.
நடப்பதற்கு ஆசைப்படுகிற
கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன.
மண்ணிறங்கும் கால்களுக்காக கனவு
காணுகிற இராத்திரிகளில் அவளது மனம்
நாற்காலியின் கீழாக தூங்குகிறது.
எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற
சக்கரங்களுடன்
யாரையாவது உதவிக்கு அழைத்தபடி
குழந்தைகள் விளையாடுகிற இடத்தின்
ஓரமாய் நிற்கிறாள்.
எட்டுவயது சிறுமி நற்காலியை நகர்த்துகிறாள்
கால்கள் நிரம்பிய பெரிய மனிதர்களின் மத்தியில்.
கால்கள் வளரும் என்று கூறுகிற தாயின்
சொற்கள் பொய்த்துவிடுகிறதாக
சொல்லிவிட்டு சிதல் கசியும்
காயத்தை காட்டுகிறாள்.
எல்லாம் ஒடுங்கியபடி
தங்கியிருக்கிறது அவளது உலகம்.
தனது கால்களை உடைத்து
தன்னிடமிருந்து
நடை பிரிக்கப்பட்டது என்கிறாள்.
மண்ணிற்குள் இறங்கிப்போயிருந்தது
அவளின் அம்மாவின் கால்கள்.
அவள் அறியாதபடி
கற்களின் மேலாகவும் கிடங்குகளிலும்
அந்தச் சக்கரங்கள் உருளுகின்றன.
அவளுக்கு முன்னால்
பெருத்த கால்கள் பெரிய அடிகளை வைத்தபடி
எங்கும் நடந்து திரிகின்றன.
தனது கால்களை தூக்கி மடியில் வைத்திருக்கிறாள்.
-----------
(12.09.2009 அன்று வவுனியா கதிர்காமர் தடுப்புமுகாமலிருந்து அழைத்து வரப்பட்ட எட்டு வயதுச் சிறுமி ----------- கைதடி தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ருடிக்கிறாள். ஷெல் தாக்குதலில் கால்கள் பழுதடைந்திருப்பதால் நடப்பதற்கு முடியாமல் சக்கர நாற்காலியை உருட்டியபடி திரிகிறாள்)
9 கருத்துகள்:
//கால்களை ஷெல் கிழித்த பொழுது
தனது கண்கள் குருதியில்
நனைத்து கிடந்தன என்று கூறியபடி
சக்கரத்தை உருட்டுகிறாள்.//
அன்புத் தோழா,
உன் கவி வரிகள் அனைத்தும் தமிழனின் வலிகள். உணர்ச்சிகளின் வரிவடிவம். அதே மண்ணில் வாழ்கிறோம் என்பதால் வலியை நானும் உணர்கிறேன். இக்கவிதையில் அழகை தேடுவது “பிரசவ வலியில் கதறும் பெண்ணின் அழுகையில், ஸ்ருதியைத் தேடுவது போன்றதாகும்”. அனைத்தும் நிதர்சனம். போராடுகிறோம் அதனால் வாழ்கிறோம் என்பது போல் அழுகிறோம், அதனால் எழுதுகிறோம் என்றே சொல்லத் தோனுகிறது. சமகாலத்தை எழுத்தில் வடிக்கிறீர்கள். நீங்கள் வடியுங்கள் ... நாங்கள் வாசிக்கிறோம்.... வாசிப்பினாலாவது மறுமலர்ச்சி பிறக்கிறதா என்று பார்ப்போம்.
என்றும் பணிவன்புடன்
மன்னார் அமுதன்
"கால்கள் வளரும் என்று கூறுகிற தாயின்
சொற்கள் பொய்த்துவிடுகிறதாக
சொல்லிவிட்டு சிதல் கசியும்
காயத்தை காட்டுகிறாள்"
இதைப் படிக்கும் பொழுது எழுகின்ற உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
சிறுமியின் வாழ்வு என்றும் நீங்காத வலிமிகுந்தது
கவிதையும் :(
அன்புள்ள அமுதன், பஹீமாஜஹான்
அச்சம் தருகிற வாழ்வாக மேலும் அகல விரிகிறது.
அந்தச் சிறுமியை பார்த்த தருணத்தில் இப்படி இவளுக்கு
வழங்கப்பட்ட பரிசை நினைத்து அதிர்ந்து பேயிருந்தேன்.
இவள் ஒருத்தியல்ல. அங்கங்களை இழந்து
அல்லது சிதைந்து அதன் துண்டுகளை
இழக்கவும் விருப்பமற்று வைத்திருக்கிறார்கள்.
ஒரு அடியேனும் அவர்களை உன்மையாக விடுவிக்கவில்லை.
இப்பொழுது என்னால் அவற்றை விரிவாக குறிப்பிட முடியிவில்லை.
நன்றி அமுதன், பஹீமாஜஹான்
தீபன்,
உங்கள் கவிதைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒவ்வொரு தடவையும் பதட்டமும் பயமுமாய் ஒடுங்கிவிடுகிறேன்.
உங்கள் ஒரு கவிதையையும் முழுமையாக படிக்க முடிவதில்லை. ஒரு ஓலம் மனதை அறுக்கிறது. பதை பதைப்பாய் இருக்கிறது.
உங்கள் முதல் தொகுப்பை பலருக்கும் வாங்கி வாசிக்க தந்தேன். எல்லாம் மாணவ்ர்கள். அவர்கள் கேட்டால், உங்கள் ஈமெயில் தரலாம் என்றால் நீங்கள் அனுமதி தர வேண்டும்.
உங்களை சந்திக்க வேண்டும் போல உள்ளது.
நீங்கள் கவிதைப்படுத்தும் கதாபாத்திரங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்யுங்கள். அந்த காட்சி ஆவணத்தோடு, உங்கள் கவிதையையும் இணைத்து ஆவணப்படுத்துங்கள்.
இதற்கு எதுவும் உதவி தேவையென்றால், எந்த நேரமென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்
தோழமையுடன்
லீனா மணிமேகலை
இது 'அவர்களின்' காலம் என்பதால்
நம் குழந்தையின் கால்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.
நம் "காலம்" வரும்!
காத்திருக்கும் நியாம்
வரலாற்றுப்பழி தீர்க்கும்
அப்போது
அவர்களது கால்கள்
தப்பிப்பதற்கு இடமேயிராது!
வினவு
அன்புள்ள மணிமேகலை
இந்தப் பக்கத்தை தொடர்ந்து பதிவிடுவதில் எந்த திட்டமும் கொண்டிருப்பதில்லை.
ஆனால் எழுத நேரிடுகிறது. மீளவும் மீளவும் அபாயம்தான். ஒன்றை ஒன்றை விளைவுகள் பீடித்து தொடருகின்றன. இதற்குள் வாழ நேர்ந்திருப்பதால் அவற்றை எழுதித்தான் ஆற முடிகிறது.
மற்றவை பற்றி மின்கடிதம் எழுதுகிறேன்
அன்புள்ள வினவு.
எட்டுவயதேயான இந்தச் சிறுமி செயலற்ற கால்களை வைத்திருக்கிறாள்.
ஆக்கிரமிக்கிற அடிமைகொள்ளுகிற பெரிய பெரிய கால்கள்
விளைந்து போயிருக்கிறது நிலத்தில்.
அவள் நடப்பதற்கும் விளையாடுவதற்கும் கால்களை கேட்கிறாள்.
வழக்கம்போல வலி கிளர்த்துகிற கவிதை. இவற்றை 'நன்றாக இருக்கிறது'என்று எப்படிச் சொல்வது தீபன்... கவலையாக இருக்கிறது.
அன்புள்ள தமிழ்நதி அக்கா
உன்மைதான் பல இடங்களில் இந்த சங்கடமே நேருகிறது. வருகைக்கு நன்றி.
கருத்துரையிடுக