o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன
பிடரிகளும் கண்களும் கைகளும்.
நிருவாணம் எல்லோரது
உடைகளையும் களைந்து விடுகிறது.
மிகவும் அஞ்ச வைத்தபடி
கோணல் துவக்கு தலையின் பின்பக்கம்
துளையிடுகிறது.
நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது.
யாருடைய முகமும் தெரியவில்லை.
எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது.
பேரூந்திலும்
நகரத்தின் உள் தெருக்களிலும்
வீட்டிலும்
தொலைக்காட்சிப்பெட்டியிலிருந்து
குருதி பரவிச்செல்கிறது.
பிள்ளைகளை தேடிக்கொண்டிருந்த தாய்மார்கள்
அலைவரிசைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இரச்சிக்கடைக்கரர்கள் சீருடையை
அணிந்தவர்களைப் போலிருக்கிறார்கள்.
தூக்குகயிறுகளில் முகங்கள் கொழுவுகின்றன.
குருதி நிலத்தை நனைக்கும்படி
கொட்டிக்கொண்டிருந்தது.
முகங்களை பார்க்க முடியாதபடியிருந்தன
என்னுடைய பிள்ளையைப்போலவும்
உன்னைய பிள்ளையைப்போலவும்
இவர்களுடைய பிள்ளையைப்போலவும்
அவர்கள் இருந்தனர்
தாய்மார்களின் முகங்களில் விழுந்துகொண்டிருக்கிறது
அந்த குருதி நனைந்த மண்துண்டுகள்.
பிள்ளைகளை காணாத தாய்மார்கள்
எல்லோரும் தங்கள் பிள்ளைகளென
கொலையுண்டவர்களின்
பின் பக்கங்களைக் கண்டு மாரதடித்தனர்.
குருதியில் அந்த தலைகள்
விழுந்து கொண்டிருக்க
இல்லாத பிள்ளைகளின் மரணம் பெருகுகிறது.
குருதி வடிகிற பிடரிகளால் நிறைந்திருக்கின்றன
கொலையாளிகளது சீருடைகள்.
அவர்கள் மனிதர்கள் என்பதைத் தவிர
எதுவும் தெரியாதிருக்க
எல்லோரது தலையின் பின்னாலும் குருதி ஊற்றியபடியிருக்கிறது.
அந்த வெளியில் கனவு சிதறி ஒழுகிய குருதியுறைந்திருந்தது.
-----------------------
(28.08.2009 சிறிலங்கா இராணுவ சீருடை அணிந்தவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்ட தமிழ் இளைஞர்களை கோரத்தனமாக சுட்டுக் கொல்லும் சாட்சியை 'சனல் 4' தொலைக்காட்சி கையடக்க தொலைபேசிக் கமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் வெளியிட்டியிருக்கிறது. இந்தக் காட்சி 2009 ஜனவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி குறிப்பிடுகிறது)
3 கருத்துகள்:
ungal kavithai nanru...aanaal,athan needsi,athu tharum sogaththai kuraiththuvidukirathu.ungal kaviththuvam paaraaddathakkathu.mudinthalavu sorkkalai kuraiththu unarvai solla muyalalaame!enenil,padikkum pothu idaiyil salippu thadda koodaathallavaa!vaazhththukkal.-raavan rajhkumar-jaffna
அன்புள்ள அநாமதேய நண்பர்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சில விடயங்களை விரிவாக பதிவு செய்ய வேண்டியிருப்பதால்தான்
அப்படி விரிவாக எழுத நேரிடுகிறது.
நீங்கள் சொல்லுவதைப் பலர் எனக்கு மின்மடலில் தெரிவித்திருக்கிறார்கள்.
அதை நான் கவனித்துக்கொள்ளகிறேன்.
உன்மையில் இணையம் நமக்கு தருகிற வசதி என்பதே கட்டுப்பாட்டையும் தாமதத்தையும் அளவுகளையும் மீறிய வெளிதான். .ருந்தும் வாசிப்பு சலித்துவிடக்கூடாதுதான்.
உங்கள் வருகைக்கு நன்றி.
nice
கருத்துரையிடுக