Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 27 நவம்பர், 2009

குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட யுத்தத்தின் நாணயத்தாள்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
குடுமி மலையில் யார் வாழ்ந்தார்கள் என்று
குழந்தைகள் கேட்கிறார்கள்.
அந்த மலையை ஆயுதம் நிரப்பிய
டோராப் படகுகள் ஏன் தாக்குகின்றன என்று
கேள்விகளை முன்வைத்தபடி
யுத்தம் நிகழும்
நாணயத்தாளை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

யுத்தம் ஏதோ ஒரு வகையில் மீள மீள
ஞாபகப்படுத்தப்படுகிறது.
இந்த நாணயத்தாள் அந்த நாள் வரை
நிகழ்த்தப்பட்ட எல்லா அழிவுகளையும்
வரைந்து வைத்திருக்கிறது.

மீட்க சகிக்காத நிகழ்வுகளையும் தோல்வியையும்
நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
நினைவு கொள்ள முடியாத நாட்களின் கதைகளால்
செய்யப்பட் கேலியான தாளின் வாயிலாக
அச்சம் தரும் காலத்தின் காட்சிகளை மட்டுமே
குழந்தைகளுக்காக சேகரித்து வைத்திருத்திருக்கிறார்கள்.

இந்த விமானங்கள் இன்னும் ஏன்
பசிக்கிற வேகத்துடன் பறந்தலைகின்றன எனவும்
ரெலிகப்டர்கள் இன்னும் ஏன் மிகவும் இறக்கமாக
பறந்து திரிகின்றன எனவும்
இந்தத் குழந்தைகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

வரலாற்றுள் ஒளிந்து கொள்ளுவதற்காய்
புனிதத்தை பூசிய
பின்பக்கமாக பதிந்திருக்கிற
குற்றம் நிரம்பிய முகத்தின் புன்னகையையையும்
திசை நோக்கியிருக்கிற கைகளையும்
நான் மொழிபெயர்த்து கூறமுடியாதபடியிருக்கிறேன்.
எதற்கும் இந்த நாணயத்தாளை தூக்கிக்கொண்டும்
கைகளுக்குள் வைத்துக்கொண்டும்
வாழ வேண்டியிருப்பதுடன்
அதற்காக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.

எரிந்து போயிருக்கிற தேசத்தில் செயின்பிளக்குகள்
இன்னும் ஏன் நிலத்தை பிய்க்கின்றன என
நான் கேட்கிறேன்?
இரணைமடுக்குளத்தினுள் அச்சம் தருகிற
உருவங்கள் இறங்குகின்றன.
எரிந்துபோன தேசத்தை தின்னும் நடவடிக்கையும்
மறுபக்கத்தில் உள்ள புன்னகையையும் விலக்க முடியாதபடி
ஒன்றின்மேல் ஒன்றாய் படிந்திருக்கிறது.
இந்த அரசன் ஏந்தியிருக்கும்
கூர் வாள் எனது குழந்தைகளை
இனிவரும் எல்லாக் காலங்களிலும் குத்தப்போகிறது.

தந்தையே எங்கள் கடலை யார் குடித்தார்கள்?
என்று எனது குழந்ழைதகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
பெரிய கொடியை எதன்மீது நாட்டினார்கள் எனவும்
அங்கு யாருடைய குருதி கொட்டியிருக்கிறது எனவும்
அங்கு குடியிருந்தவர்கள்
எங்கு துரத்தப்பட்டார்கள் எனவும்
எனது எதிர்காலக் குழந்தைகள் கேட்கப்போகிறார்கள்.

தங்களுக்காக சேமிக்கப்பட்டிருக்கிற நாணயத்தாள்களில்
நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற
படைகளின் சாப்பாத்துக்களையும்
தொப்பிகளையும்
அதிகாரம் வளருகிற நட்சத்திரங்களையும்
எல்லாக் குழந்தைகளும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். _________________________
18.11.2009

2 கருத்துகள்:

ஃபஹீமாஜஹான் சொன்னது…

தீபச் செல்வன்
இது வரை நான் படித்த உங்கள் கவிதைகளில் மிகச் சிறப்பான கவிதை இது.இன்றைய வாழ்வை நாளைய நிகழ்வுகளுக்கூடாக தரிசிக்க வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Theepachelvan சொன்னது…

அன்பிற்குரிய ஃபஹீமாஜஹான்,

குறித்த யுத்தத்தின் நாணயத்தாளை பார்த்திருப்பிங்கள் என நினைக்கிறேன். மறந்து போக வேண்டியவற்றை அது என்றும் ஞாபகப்படுத்தப்போகிறது. எங்கள் தோல்வியை அவர்கள் ஞாபகப்படுத்தி எல்லா நாளும் கொண்டாடுவதற்காகவும் பிரசாரத்திற்காகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அடிமனதை மிக வருத்துகிற செயல்கள்தானே இது...

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...