யாருடைய கால்களுமற்ற மைதானத்தில்
தனியே உருண்டு கொண்டிருக்கிறது
நேற்று விளையாடி பந்து
நான் சுவையற்ற மதுவை தனியே அருந்துவேன்
கிராமங்களுக்குள் நுழையும் வீதியில் தனியே செல்லுவேன்
இரண்டு மதுக்கோப்பைகளில் ஒன்றைக் காணவில்லையென
மதுச்சேவகன் தேடுவான்
புளுதி கிளப்பிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள்
எங்கு மறைந்தென்று தெருவில் ஒருத்தி தேடுவாள்
இனி யாருமில்லை நண்பா
வெறிச்சோடிய நகரத்தில்
வீதியில் தனியே நடந்து செல்லுகிறேன்
இனி ஒரு கதையையும் பேசப்போவதில்லை
ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி
குளிருக்குள் கணத்த ஆடைகளை அணிந்தபடி
அனுப்பும் ஒரு புகைப்படத்திற்கு
சோறூட்டுவாள் உனது அம்மா
வர்த்தக மாளிகைகள் எழுப்புதவற்காய்
நேற்று விற்றுத் தீர்க்கப்பட்டது உனது காணிநிலம்
எல்லோரும் வெளியேறிய நகரத்தில்
யாரோ அகன்ற வீதிகளைப் போடுட்டு
உயர்ந்த மாளிகைகளை எழுப்புகின்றனர்
எனக்கென இருந்த இறுதி நண்பனே
நேற்றுடன் நீயும் வெளிநாடு சென்றுவிட்டாய்
தாய் நிலத்திலிருந்து
இன்றுடன் உனது பெயரையும் அழித்துவிட்டனர்
தீபச்செல்வன்
நன்றி: கணையாழி நவம்பர் 2013
ஓவியம்: மணிவர்மா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக