பலியிட முன்பாக விட்டுச்செல்லப்பட்ட
ஒரே ஒரு பார்வையில்
தன் சாட்சியை வழங்கிற்று அக்குழந்தை
கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு
துப்பாக்கிகளின் முன்பாக
இருத்தப்பட்ட குழந்தைகளிடம்
பொம்மைகள்கூட இல்லை
ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்களில்
மலர்ந்திருக்கிறது அல்லிப்பூ
ஓரினம் அழித்துத் துடைக்கப்பட்ட நாளில்
எதுவும் முடிந்திருக்கவில்லை
எதனையும் முடி மறைக்க முடியாதபடி
எதையே விட்டுச்சென்றது அக்குழந்தை
நஞ்சூட்டப்பட்ட இறுதி உணவோடு
பூமியின்மீதான கடைசிப் பார்வையைச் செலுத்துகையில்
அடுத்த தலைமுறையை
புரட்சிக்கு அழைக்கும் முதல் குழந்தையாயிருந்தது
குழந்தைகளுக்காகவே யுத்தம் செய்தோம்
யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்
திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி
வாழத் தொடங்கும் ஒரு குழந்தையை கொல்லுகையில்
அதன் கடைசிப் பார்வையிலிருந்து தொடங்கிற்று புரட்சி
அழிந்துகொண்டிருக்கும் தேசத்தை
மீண்டும் துளிர்க்கச் செய்கிறது
ஒரு குழந்தையைப் பலியிட்டதன் பின்னரான புரட்சி!
தீபச்செல்வன்
நன்றி: குமுதம்
1 கருத்துகள்:
என்ன சொன்னாலும் இது கொடுமை என்று மனம் பதட்டமடையச் செய்கிறது...
புரட்சி வெற்றி பெற்று விரைவில் எல்லார் வாழ்வும் பூவாக மலர வேண்டுகிறேன்...
கருத்துரையிடுக