01
எத்தனை தடவை
இந்த நகரத்தைச் சுற்றியிருக்கிறேன்?
இறுதித் தருணத்தில்
நகரம் என்னைச் சுழன்றது
நானாய் விரும்பி வெளியேறும்
பொழுது எதற்காக அழுதேன்?
சிதைக்கப்படும் இந்தப் புரதான நகரைப்
பிரிகையில் நான் கொல்லப்படுகிறேன்.
ஏன் இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாய்
நான் நேசிக்கிறேன்?
ஏன் இந்த நகரத்தின் சுவர்களை
மிக நெருங்கியிருந்து வாசிக்கிறேன்?
சுற்றிச் சுற்றி நாய்கள் குரைத்து
இரவை அதிரப் பண்ணிய நாட்களிலும்
நகரின் தெருக்களில் நான் பாடித் திரிந்தேன்
அபாயங்கள் கால்வாய்களில் ஒளிந்து
வருபவர்களை எதிர்பார்த்திருந்த காலத்திலும்
நான் வாழ்ந்திருந்தேன்.
வாழ்வு என்பது என்ன?
எப்பொழுது மரணம் சம்பவிக்கிறது?
கொலை பிரகடனப்படுத்தப்பட்ட நகரிலுள்ள
சிறிய அறைகூட
பெரிய உலகமாக விரிந்திருந்தது
அச்சம் நிர்மூலமாய் கவிழ்ந்திருந்த பொழுதிலும்
மரணம் வாசலில் பதுங்கிக்கிடந்த பொழுதிலும்
வாழ்வைப் பற்றிக் கனவுகள் வளர்த்தேன்.
02
பயங்கரங்களில் கலந்த பொழுதுகளையும்
துளிர்த்த வாழ்விலிருந்த வார்த்தைகளையும்
கொலை நகரின் மூடப்பட்ட அறையில் விட்டுவந்திருக்கிறேன்
ஒன்றையும் எடுத்துவரவில்லை
எல்லாம்
எனது அறையிலும் தறப்பாள் கூடார வீட்டிலும்
எனது நகரத்திலும் பெருநிலத்திலும்
நான் துரத்தப்படுவதை
நானாகவே வெளியேறிக் கொள்வதாக எழுதுகிறேன்
உயிர் தப்பித்து வந்த பொழுது
நான் மரணித்துப் போனேன்
வேருடன் பிடுங்கி நெருப்புக் கிண்ணத்தில்
நடப்பட்டிருக்கும் செடியாகக் கருகினேன்
எல்லாம் சுழன்று வீழ்ந்தன
அம்மாவைப் பிரியும்
சிறிய குழந்தையாய் தேம்பியழுதேன்
ஒரு குழந்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது
குழந்தைகள் மட்டும் அனுபவிக்கும் துயரங்களாய்க்
குழந்தைகள் மட்டும் பேசி முடியும் கதைகளாய்க்
குழந்தைகள் ஆசைப்படும் உலகமாய்
எல்லாமே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளைப்போல
தூக்கி வீசப்பட்டேன் எனது நிலத்திலிருந்து!
தீபச்செல்வன்
2011
நன்றி: மகுடம் ஜனவரி -மார்ச் 2013
0 கருத்துகள்:
கருத்துரையிடுக