_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________
உடைந்து துண்டு துண்டாக
கிடக்கிறது
உனக்காக நான்
கட்டிவைத்த வீடு
நீயும் நானும்
பேசிக்கொள்ளவும்
சுயங்களை
பரிமாறி நமக்குள்
உறவை ஏற்படுத்தவும்
வீடு கட்டப்பட்டிருந்தது..
உனக்காக சில
விசேஷ சாளரங்களை
அமைத்து
பல்வேறுவிதமான
காட்சிகளையும்
மாட்டியிருந்தேன்..
நமது நலனுக்காகவே
சில சாளரங்களை பூட்டி
சில காட்சிகளை
காணாமலும்
வழி திறந்தேன்..
கதவுகள் இல்லாத
வாசல்களை
நிறையவே செய்துவைத்தேன்
உனக்கு பிடித்த
பல்வேறு வரவுகளால்
உனக்கேற்ற
தூரங்களால்
எனது வாசல்
மிக அகல விரிந்து
உன்னை வரவேற்றது.
நீ என்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
எனது வீட்டின் கூரையை
சுவரை
ஜன்னல்களை
வாசலை
படம் பிடிப்பது போல
நோட்டமிட்டு வேவெடுத்தாய்..
எனது கூரையை
சிதைத்து
எனது சுவர்களை
சரித்து
எனக்கான பசுமையை
அழித்து
உனது பார்வையில்
வெறியூட்டி
எனது வீட்டின் நிழலை
குழப்பியடித்திருக்கிறாய்..
இனி நாம் நமக்கென்ற
வீடு பற்றிய
எண்ணத்திலிருந்து விடுபடுவோம்;.
நீ உனக்கான
வீட்டை கட்டு
நான் என்கான
வீட்டை கட்டுகிறேன்
யாரும் யாருடைய வீடுகளையும்
சிதைக்கத்தேவையில்லை
கட்சிகளை குழப்பத்தேவையில்லை
அவரவர் நிழல்களை
விடுவித்து
அவரவர் சுயத்துடன் வாழ்வதற்கு
நல்லதோர் வீடுசெய்வோம்
அவரவர் வீட்டின்
சாளரங்களை திறந்து
பொருத்தமான
காட்சிகளை பார்ப்போம்।
____________________________
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக