_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
நாங்கள் எல்லோரும்
மரணங்களைச் சுமந்தே
வாழ்கிறோம்
எனது அப்பாவின் மரணம்
மர்மமானது
எனது அக்காவின் மரணம்
பரிதாபமானது
மரணங்களுக்குள்
நீதியை சமன்செய்த
எனது அண்ணாவின் மரணம்
மகத்துவப்பட்டு வாழும்
மற்றொரு விதமானது.
எல்லோரும் மரணங்களைச்
சுமப்பது
அந்நியக்குணங்களின்
கறுப்பாக்கப்படுதலுக்கான
தேசத்தின் மீதான குறி.
மரணங்களில் சிலர்
வாழ்கிறார்கள்
அந்த ஒவ்வொரு
மரணங்களிலும்
ஒரு சுதந்திர உலகம்
நிகழுகிறது
வேறுபக்கத்தில்
சமிக்காது தேங்கியிருக்கும்
அழுகைப்பட்ட
மரணங்களின் மொழிகளை
சுவைத்துப் பார்க்கிறேன்
அவைகள்
மரணங்களின் விதிகளை
நொந்து அழுகின்றன.
நானும் சுயக்கல்லறையில்
மரணித்து வாழ்கிறேன்
பிணமாகி
உதிராதபடி நடமாடுகிறேன்
கிழித்துப்பறிக்கப்பட்டு
கறுப்பாக்கப்படும்
அதே தேசத்தில்.
அந்நிய முகங்களின்
கோரப்புன்னகைகளை
வலிந்து
சுவைக்க இயலாமலும்
அதிகாரக்குரல்களை
சமிக்க இயலாமலும்
இறுகியிருக்கிறது
ஆன்மாவின் இயக்கம்.
இப்போது வலிந்து
எம்மீது சுமத்தப்பட்ட
மரணங்களை
தொடர்ந்தும் யாரும்
தலையில் சுமந்து
போகக்கூடாது
பொதுமைப்பட்டு
பரவமுனையும்
வலியின் கோரகுணத்தை
திருக பாரம் தரும்
விதிப்பட்ட மரணங்கள்
மற்றொரு விதத்தில்
நிகழட்டும்
எங்களுக்கே உரிய
சுதந்திர உலகத்தை விரித்து.
---------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக