_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
நீ நீட்டிய தேநீர்க் கோப்பையை
உதடுகள் வரை
எடுத்;து வாசித்து விட்டு
எச்சரிக்கையை உணர்ந்தேன்
கோப்பையில்
விசம் நிரம்பியிருந்தது.
நீ தேநீர் பருகவே
என்னை அழைத்தாய்
என்று கருதி
தயாரிக்கப்பட்ட
மாலை நேரம்
இரத்தம் வடிய எட்டிப்போகிறது.
சூரியனில் இரத்தம்
சிந்திக் கொண்டிருக்க
காலைகளை
நானிழந்து விடவும் நேரிட்டது.
தேநீர்க் கோப்பையின்
விசத்தில்
நீ மறைத்து எழுதிய
வாசகத்தை நான் படித்தேன்
சாம்பலில் எழும்பிய
நகரத்தில்
நீ கொடியேற்ற கனவு காண்பதாய்
எழுதியிருந்தாய்.
பயங்கர ஆயுதங்களை
கையாண்டு
எமது நகரங்களை அள்ளி
சவப்பெட்டிகளில்
நிரப்பவும் நினைத்தாய்
எனது குரல் எரிந்து
சாம்பலாகிப்போகும்
அதில் நீ நடந்து வரலாம்
என்றும் நீ நம்பினாய்
நான் அதிக எச்சரிக்கையாக இருந்தேன்.
என்குள் நீ
அடிக்கடி எழுப்பிய
ஒலியின் அதிர்வு
எனக்கென்று ஒரு பாடலை எழுதியது
என் மீது அடிக்கடி நீ
பிரயோகித்த ஒளி
எனக்கென்ற வெளிச்சமாகி
ஒரு திசையைத் திறந்து விட்டது.
நீ காணும்
சாம்பல் நகரம்
பற்றிய அதீத கனவிலிருந்து
உன்னை
தூக்கி எறியவும்
நான் வருகிறேன்
எந்த நிறம்
உதிர்ந்து போகும்
என்று நீ கருதினாயோ
அந்த நிறமே உன்மீது
படையெடுத்து வருகின்றது
எந்த சொற்கள்
சாம்பலாகிப்போகும்
என்று நீ நம்பினாயோ
அந்தச் சொற்களே
உன்னைத்திருக வருகின்றன.
உனது சாம்பல் வண்டி
உதிர்ந்தபடி வருகின்றது.
நான் நன்கு வாசித்த
உனது விசம் நிரம்பிய
தேநீர்க்கோப்பைகள்
நமக்கிடையில்
எரிந்து கிடக்கின்றன.
எனது வண்டி
வெற்றியின் சீருடையை அணிந்து
கம்பீரமாகப் புறப்படுகினறது.
-------------------------------------------------
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக