_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
உனது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.
பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.
உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.
நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.
தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.
இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.
உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-----------------------------------------
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக