_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________
எனக்கு தேவாரம்
பாடத்தெரியவில்லை
அப்பா குளிக்க மூழ்கிய
குளக்கரையின்
ஏதிர்த்திசையில்
ஆவதானிக்கிறேன்
ஞானப்பாலூட்டுவதற்கு
கடவுளோ
அவரின் மனைவியோ
வருவதாயில்லை..
நான் தொடர்ந்து
அழுது பார்க்கிறேன்
எனது அழுகையின்
பக்கத்தில்
பலரும் போய்வருகிறார்கள்
என் அழுகை குறித்து
விசாரிக்க எவருமில்லை
அவரவர்
தங்கள் வண்டிகளில்
பார்வைகளை செலுத்தியபடி
அதை ஓட்டிப்போகிறார்கள்..
எனக்கு தாகமெடுக்கிறது
ஞானப்பால் குறித்த
நினைவுகளில்
இப்போது
தேனீர் வண்டிக்காரனின்
சில்லரைக்காசுகளின் சத்தம்
வியாபார முழக்கமிடுகிறது...
அந்த தேனீர் வண்டிக்காரனும்
கடவுளாகவோ
அவரின் மனைவியாகவோ
இருக்க முடியாது..
மூன்று வயதின்
ஞானப்பால் நினைவை
அந்தக் குளக்ரையில்
வீசியிருக்கிறேன்..
இப்பொழுதும் அந்த வழியில்
போய்வருகிறேன்
அப்பா குளித்து
கரையேறாத
அந்தக் குளக்கரையில்
எனது பார்வைகளை
செலுத்துவதில்லை..
------------------------------------------------------------
தீபச்செல்வன் Theepachelvan
21 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக