_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________
நமது சந்திப்புக்கள் ஒவ்வொன்றும்
ஆயுளை விட பெரியன
இடங்களும் சொற்களும்
காயபமல்
தேனீர் கோப்பைகளை
நிரப்பியிருக்கின்றன.
உன்னிடம் தான்
நான் நிறைய சொற்களை
கவிதைகளாயும்
பாடல்களாயும்
வாங்கியிருக்கிறேன்.
ஒவ்வொரு சொற்களிலும்
உனது ஒளிபடர்ந்த முகமும்
கருனை கலந்த குரலும்
அடர்ந்திருந்தன.
குறிப்பாக மாலை நேரங்களில்
உனது முகத்தை
மஞ்சள் வெயிலில் பரப்பி
வீட்டுக்கு வருவாய்
எனது வெள்ளை சீருடைகளில்
எனது புத்தகங்களில்
என்னை மறைத்து வைப்பேன்
உனக்கு ஆறுதலலித்த
எனது வீடும் எனது முகமும்
பாதுகாப்பளித்த விழிகளும்
பெருமையில் அழுகின்றன.
உன்னிடம் தான்
கருனையின் புன்னகையை
பார்த்திருக்கிறேன்
உன்னால் தான்
ஒரு தயைப்போல அணுகமுடியும்.
யாரும் குறித்து வைக்காத
நமது சந்திப்புக்களை
இடங்களை சொற்களை
தூரத்தில் விட்டு
உனது வேளைகளுக்காக
துடிக்கிறேன்.
எல்லாம் தெருக்களில் மறைந்தன.
நீ பகிர்ந்த தாய்மையை
உனது இலட்சியத்தை
துணிவை சாதனையை
தோள்களின் பலத்தை
இழந்து விடுவேனோ
அச்சமடைந்திருக்க
இருளின் கல்லறைக்குள்ளும்
வெளியிலும்
நடமாடுவதைப்போல
உனது முகம் தெரிகிறது.
கடைசிவரைக்கும்
நாம் திரிந்த
குறுக்குத் தெருக்களில்
உனது சைக்கிள் எங்கேனும்
நிறுத்தப்பட்டிருக்கிறதா என்று
தேடியபடி இருப்பேன்.
நீ விரும்பிய பிரதான தெருக்களில்
திரியும் அங்கலாய்ப்பு
நமது நகரின் வாசலுக்கு
மடிந்து கொண்டு வருகிறது
அந்த தெருக்களுக்காக
மரங்களுக்காக
நீ இரத்தம் சிந்தினாய்
நான் வியர்வையேனும் சிந்துவேன்.
என்றேனும் ஒருநாள்
நமதுநகரின் பிரதானதெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கம்.
--------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
1 கருத்துகள்:
(தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.
நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.)
நலல வரிகள் வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக