பட்டியற்ற மாடுகள் தெரு மரங்களில்
உறைந்திருக்க பெருமழை பெய்தது
புளுதியடங்க மின் குமிழ்கள் சிரித்தன
விடுதியில் தொடங்கிற்று மழை உரையாடல்
சாளரங்களை திறந்து ரசிப்பவனும்
குளிர் தாங்காது மூடுபவனும்
மின்கம்பிகளின் அடியில்
இருட்ட உருவங்களுக்கு அஞ்சுபவனுமாய்
சாளரங்கள் திறந்து மூடும்
எப்படியும் ஒருவன்
துப்பாக்கிகள் அலையும் இரவு பற்றி நிதானமாயிருப்பான்
கதவுகளை இறுக்கி பாதுகாப்பான்
இரவை அமத்தும் அவனை மீறி
கூச்சல் போடும் மீதிப்பேரும்
அடிக்கடி தூரத்தில் தெரியும் துப்பாக்கிகளை
அண்மித்து வருவார்கள்.
மழை நாட்கள்
மழை இரவுகள்
மழைத் தெருக்கள்
குறித்து ஒருவன் பேசத் தொடங்க
புத்தகங்கள் ஒதுங்கின
எப்போதும் மழையில் நனையவும்
நனைந்தபடி சைக்கிளில் திரியவும்
ஆசையோடிருக்கிறோம் மூடுண்ட நகரில்
இரவு, மழை, தெருக்கள்
வேறுபாடின்றி இணைந்து கிடக்கும் நாளொன்றில்
ஒரே ஒருமுறை நகரை சுற்றி வருதலை
நினைக்க மனதில் ஒரு மழைதுளி விழுந்தது
மழைப் பின்னிரவில் நீண்டது
கதவுகளை தாண்டி
புத்தகங்களை நோக்கி
மழைநாட்களின் இரவுகளையும்
தின்னுதொரு துப்பாக்கி
0
2007
தீபச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக