_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
நான் நேசிப்பவைகள்
உனக்கு
விரோதமானவை
நீயும் நானும்
இணையும்
சாத்தியங்கள்
அகராதியில் இல்லை.
அப்படியென்றால்
நமக்கான
சம்பந்தம் பற்றிய
பிரயத்தனங்கள்
வீணானவைதானே.
இதில் நாமிருவரே
நிதானித்து
முடிவெடுக்கவேண்டும்.
என்னை சிறையிலும்
உன்னை வெளியிலும்
அடைப்பித்து
அவைகளை
நரகத்தில்
நடமாடவிடும்
அவர்களின்
கலாசாரம் பற்றி
நாமே கவலைப்படுகிறோம்
அவர்களல்ல.
உன்னுடைய
ஒப்புதலுக்காக
நான் உடன்பட்டேன்
எதிர்ப்புகளிலும்.
சரிஎன்று
எத்தனை தடவைகள்
சமாளிப்பது
இது இறுதியான
நாம்பற்றிய
பார்வையாயிருக்கட்டும்.
இதில் நீயும் நானும்
உறுதியாய்
இருப்போம்.
பயனற்ற பயணத்தில்
நடந்துகொண்டதால்
உனக்கு கால்கள்
வலிக்கிறது.
உள்ளே இருந்து
துயரங்களை
தின்றதனால்
எனக்கு உள்ளம்
வலிக்கிறது
ஆக வதைப்புகள்
நமக்குத்தானே.
என்னுடைய
காத்திருப்புகளும்
உன்னுடைய
ஏமாற்றங்களும்
இனி நிச்சயம்
எதிர்த்துக்கொள்ளவேண்டும்
பொங்குதலாய் அவைகளில்.
அதனால் அடுத்து
நீ சிறைப்படு
நான்
விடுதலையடைகிறேன்.
-----------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக