_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
கடவுள் கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கிறார்
அவரின் கழுத்து
நெரிக்கப்பட்ட பின்பும்
வெள்ளைக் கயிற்றில்
சுருக்கிலிடப்பட்டிருக்கிறார்.
அவர் தான் வளர்த்த
சேடிகளைப்பார்த்து
ஏதோ பேச
ஏத்தனிக்கிறார்
அவரின் கண்கள்
வெள்ளைத் துணியினால்
கட்டப்பட்டும்
ஓளி வெளியில் பீறிடுகிறது
அதில் செடிகள்
மூச்சிடுகின்றன.
இப்போது
யாரோ ஒருவனின்
கறுத்த முகத்தில்
கடவுள் என்று
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருக்கிறது
அவன் சிரிக்கிறான்
அவனின் பற்களில்
அழுகுரல்கள் காய்ந்து
சொருகியிருக்கின்றன
படிந்திருக்கின்றன.
அவன் செடிகளை
முண்டியடித்து
கடவுளின் முகத்தை
மறைத்தபடி
அவர் மரணிக்கிறார்
என்று கதறி அழுகிறான்
அடியில் சிரிப்பெழுகிறது.
அவனின் முகராசியில்
செடிகள்
பீறிட்டு அழுகின்றன
கடவுளைப்பார்த்தும்
அவனின் முகத்தில்
எழுதப்பட்டவைகளைப் பார்த்தும்.
அவன் குடுமில்
காயாத வேர்களை
முடிந்திருக்கிறான்
வாடாத குருத்துக்களை
வாயில் போட்டு
சப்பியபடி
கடவுள் வளர்த்த
செடிகளை
தொட்டு அழுகிறான்.
எல்லா செடிகளையும்
வேரோடு பிடுங்கி
இனி மயானத்தில் நடுவான்.
கடவுளின் உருவம்
தூரப்படுகிறது
அவரின் ஒளிமட்டும்
மற்றொரு புதிய திசையில்
தனித்துத்தெரிகிறது
செடிகளை சுடலைவாசி
படைத்துக்கொள்கிறான்
தன் வாசத்தில்.
-------------------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக