_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
பள்ளிக்கூட மாணவர்கள்
வெள்ளை சீருடைகளை
அணிந்து
நண்பர்களை
நிரப்பிய
சவப் பெட்டியுடன்
மயானங்களை நோக்கி
போய்க் கொண்டிருந்தார்கள்
புத்தகங்களை
சோதனைச்சாவடியில்
விரித்தும்
முகாங்களில்
ஒதுக்கியும்
சீருடைகளை
முட்கம்பிசுருள்களில்
உலரவிட்டும்
பள்ளிக்கூடங்கள்
இராணுவ முகாம்கள் என்று
அறிவிக்கப்பட்டது
இராணுவ சீருடைகளுக்கு
கீழேயும்
துப்பாக்கிகளில் அமர்ந்தும்
பரீட்சை எழுதும்படியும்
அறிவிக்கப்பட்டது
பள்ளிக் கூடங்கள்
சிறைச்சாலையாகவும்
துப்பாக்கி கதவுகளை தாண்டி
வருபவர்களும் அஞ்சுவர்களும்
புத்தகத்தின் நடுப்பக்கத்தை
தாண்டாதவர்களும்
சீருடைகளால் கட்டி
தகர்க்கப்பட்டனர்.
முட்கம்பி ஓடைக்குள் நின்று
மாணவர்கள்
அழுதார்கள்
ஆசிரியர்களும்
சவப்பெட்டியை நினைத்து
திடுக்கிட்டார்கள்
ஆசிரியர்களும்
மாணவர்களுமாய்
துப்பாக்கிகளின் முன்
அணிவகுத்து நின்றார்கள்
இராணுவ சீருடையின் பின்னணியில்
விழுத்தப்பட்ட ஒளிப்படத்துடன்
சவத்தை நிரப்பிய
புத்தக பைகளுடன்
மயானங்களை முதலிய
பள்ளிக்கு மாணவர்கள்
தோள்களை சுமந்தார்கள்
----------------------------------------------------------
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக