கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
நமது வாழைமரங்களை
அழிக்க அவர்கள்
மிகப்பெரிய வாட்களோடு
புகுந்தார்கள்
எல்லா வாழைஇலைகளும்
கிழிந்து கிடக்கின்றன
பசுமையைகாலடியில் போட்டு
மிதித்திருந்தார்கள்
காற்றின் கூடுகளை
கிழித்தழித்தார்கள்.
நமது மிகப் பழமையான
மண் அரித்துச்
செல்லப்பட்டுக்கொண்டிருந்தது
வீடுகளும்
வீதிகளும் வாழ்வும்
கரைந்துகொண்டிருந்தன.
நிலவு அழுதுவடிக்கிறது
மிகப்பசுமையான
வாழையிலையில்
கலந்து படைத்திருந்த
நமது முகங்களையும்
அவர்கள் கிழிக்க
நான் கடலில் மிதந்தேன்
நமது கண்கள்
காற்றில் மிதந்தன
எனது முகத்தை காணவில்லை.
அலைகள் மொழிகளை
இழந்து அமைதியாயிருந்தன
கடலின் முகங்கள்
வீங்கி பெருத்திருந்தன
நானிருந்த படகு
அலைந்துகொண்டிருந்தது
இறுகிய
தண்ணீர் மேடுகளில்
மோதி
துண்டுதுண்டாய் உடைந்தது.
எஞ்சியிருந்த
ஒரு துண்டு படகும்
கரைந்துவிட்டது
உப்புக்காற்று தேங்கிய
ஈரமான
எனது வெள்ளைத்துணி
தவறி கடலில் விழுந்தது
நான் எடுத்து வந்த
அரிசி அடங்கிய
சின்ன பொதிகளும்
கைதவறி விழுந்து
கடலில் தாண்டன.
நான் கண்டேன்
எனதூரில்
அவர்கள் கிழித்த
சில வாழையிலைகள்
கடலில் எறியப்பட்டிருந்தன
மீன்களும் கொலைசெய்யப்பட்டு
மிதந்துகொண்டிருந்தன.
-------------------------------------------------
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக