_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
எல்லோரும் நமக்கென்று
இருக்கிற நிறங்களை
காத்துக்கொள்வோம்.
எனது வீட்டின்முற்றத்தில்
உருண்டு கிடக்கையில்
எனது நிறத்தால் மகிழ்கிறேன்
எனக்கு எனதுநிறம்
மிக முக்கியமானது
எதற்காகவும் எனது நிறத்தை
இழக்க தயாரில்லை.
எல்லோரும் அவரவர்
நிறங்களை
தங்கள் சிறந்தவண்டிகளில்
ஏற்றிப்போகிறார்கள்
நான் எனது நிறத்தை
அள்ளிச் சுமந்தபடி
கால்நடையாக பயணிக்கிறேன்.
யாருடைய நிறங்களையும்
அழிப்பதற்கு
நான் புறப்பட்டதில்லை
எனது நிறத்திற்காக
அழுதிருக்கிறேன்
விழித்து எழுந்திருக்கிறேன்.
எனது நிறம் மறைக்கப்படுவதான
பிரகடனங்களும்
வலிந்த தலையீடுகளும்
எனது நிறம்பற்றிய
வெள்ளை சிந்தனைகளை
எனது நிறத்தின் ஆயுளை
துரத்தி சிலகோடுகளாக திரிந்தன.
நிறம் பற்றிய வாதங்கள்
முற்றியநாளில்
தெருவொன்றில் சிதைந்துகிடந்த
எனது நிறத்தின் ஆதியை
தூக்கி சுகப்படுத்த
வண்டியற்று திரிந்த
வலியின் சுமையில்
நிறம் வெறிகொள்ளத்தொடங்கியது.
நிறங்களின் மிகுந்த வறுமையோடு
திரிகிற வண்ணத்துப்பூச்சிகளாலும்
மான்களாலும்
மயில்களாலும்
நிரம்பிய வெளுத்த தோட்டத்தில்
நிறம் பற்றிய
புதிய நிமிர்வு நெருப்பில் பிறந்தது.
நிறத்தை வென்று
நமக்கென்ற
நிறத்துடன் ஒளிர்கையில்
மீண்டும் நமது வெல்லப்பட்ட
நிறம் தேடப்படுகின்றுது
நிறத்தை பூசியபடி
நிறத்தை உடுத்தியபடி
நிறத்தை அள்ளிச்சாப்பிட்டபடி
போகமுடியாமல் இருக்கிறோம்.
நாம் நமது நிறத்தை
விடுத்து
இருளாக நடமாடமுடியாது
நமக்கென்ற
நிறத்தை அணிந்தபடியே
நமது அடையாளத்தின்
ஒளியிலே
தெருக்களில் நடமாடுவோம்।
---------------------------------------------------
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக