_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________
எந்த மரங்களும் எனது கையில்லை.
நிழலுக்கான அதிகாரங்கள்
பறிபோன நிலையில்
தோப்பைவிட்டு
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.
எனினும் அந்த மரங்களிலேயே
எனது இருப்பும் ஆவலும்
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.
நான் எதுவும் செய்யாதிருந்தேன்
நிழலில்லாத
வெம்மை வெளிகளில் காலை
புதைத்தபடி நிற்கின்றேன்.
தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து
மனதாறிவிட்டோ
நிழலை ரசித்துவிட்டோ
வாழமுடியாதிருக்கிறது।
ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு மரமாக
குறைந்துகொண்டு வருகிறது।
எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.
நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்
எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.
நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.
என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்
கோடரிகளை மீறி
என்னைக் கடந்து
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.
---------------------------------------------------------
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக