_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________
பயணம் திடீரென்று
அறிவிக்கப்பட்டது
எல்லோரும் புறப்பட
தயாராகினார்கள்.
இது நிச்சயமென்றில்லை
இராணுவ விசாரணைக்கு பிறகு
மீண்டும் விடுதிக்கு வரலாம்.
புத்தகங்களை விடுத்து
உடுப்புக்களை சுருட்டி
கட்டினார்கள்
இனி இந்த புத்தகங்கள்
திறப்பதற்கான சூழல்
இல்லாது போகலாம.
நான் அந்த மேசையில்
கடைசியாய் வாசித்தேன்
அழுகையில் விடுதி வெளித்தது.
எல்லாம் இழந்து
வெறும் மனிதர்களாய்
உருவங்கள் நூலகத்தின் கரையில்
போய்க் கொண்டிருந்தன.
ஒரே ஒரு புத்தகம்
எடுத்துவர அனுமதிக்கப்பட்டது.
துயர் நிரம்பிய உனது
ஒளிப்படத்தை
எனது புத்தகத்தில்
மறைத்து எடுத்து வந்தேன்.
அதில் நீ ஏதோ ஒன்றை
இன்னும் பிரதிபலித்தபடியிருந்தாய்.
எல்லோரும் ஒருவலியுடன்
நடந்தார்கள்
சிறைக்குள் இருந்து
இன்னொரு சிறைக்கு
பயணிப்பதைப்போல.
கடைசியாய் என்னையும் அனுப்பி
விடுதிக்கதவை
காவலாளி இழுத்து மூடினான்
தனித்தவனாய் நானும்
எனது புத்தகத்தில்
உனது ஒளிப்படத்தை மறைத்தபடி
தண்ணீரில்
நடக்கத்தொடங்கினேன்.
____________________________
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக