வேயாத தற்போதைய
தற்காலிக வீட்டிற்குளிருந்து
புதிய வீடு கட்டுவது குறித்த
திட்டத்தை வேய்ந்துகொண்டிருக்கிறோம்
நானும் அம்மாவும்.
முதலில் வீடு
பின்னர் அளவான கிணறு
அத்தோடு மலசலகூடம்
இவ்வளவும் கட்டவேண்டும்
என்பது எங்கள் அடிப்படைத்திட்டம்.
காணாமல்போயிருந்தும்
அப்பாவின் அடையாளம்
முழுமைப்பட்டு
எப்போதும் சுமங்கலியாய தெரியும்
அம்மா தன் ஒற்றைக்கையில்
வீடு கட்டும் திட்டத்தை
வரைந்திருக்கிறாள்
எங்களை அருகிலிருத்தியபடி.
கல்லறையில் இருக்கும்
அண்ணாவோடும்
இது குறித்து கலந்து
அம்மா வரைபடம்
செய்திருக்கிறாள்.
மழை பெய்யும் வீடு.
பக்கத்து வீட்டில் பகுதிநேரமாய்
தண்ணி எடுக்கும் ஒப்பந்தம்
ஒருவாறு ஒத்துப்போகிறது.
மலசலம் கழிக்க
காடுகளின் திறந்த கழிப்பறைகள்
தூரப்பட்ட தளத்தில்
இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறோம்
ஒரு நாள்களும் நாங்களும்.
எனக்கான பல்கலைக்கழக படிப்புச்செலவு
தங்கைக்கான பாடசாலை படிப்புச்செலவு
இவைகளோடு
எங்கள் தீவணத்தையும் ஆடைகளையும்
அம்மாவின் மாதச்சம்பளம்
சினந்தபடி அடக்கம் செய்துகொள்ளும்.
இதற்குள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும்
நானும் அம்மாவும்
எங்கள் வீடு கட்டும் திட்டத்தை
புதுப்பித்துக்கொள்வோம்.
2006
நன்றி-தாயகம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக