______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________
ஒரு பயங்கரப் பறவையின்
கொடிய சிறகு
உதிர்க்கப்பட்டிருக்கிறது
அல்லது
அந்தப்பறவைக்கூட்டத்தின்
ஒரு பறவை
வீழ்த்தப்பட்டிருக்கிறது.
பயங்கர பறவைகளினால்
கொத்தி கிழித்து
குதறப்பட்ட சமூகத்திலிருந்து
வேட்டைக்காரப் போராளிகள்
வெளிவந்தார்கள்.
இந்தப்பயங்கரப் பறவைகளினால்
சீரழிக்கப்பட்டு
இரத்தம் கொட்டியபடி
வெள்ளை புறாக்களும்
தேசத்தைவிட்டு வெளியேறின
பறவைகள் பற்றிய
புதிய தத்துவத்தோடு,
சிறகுகள் பற்றியும்
அம்புகள் பற்றியும்
அனுபவங்களை வழங்கிவிட்டு.
கிழிக்கப்பட்ட
வார்த்தையின் கொதியில்,
பொறுமைகாத்த
எரிமலையின் மௌனத்தில்,
பயங்கர சிறகுகளால்
சிதைக்கப்பட்ட
அப்பாவிகளின் ஆன்மாவில்,
செய்யப்பட்ட அம்புகளை
வேட்டைக்காரப் போராளிகள்
அணிந்துகொண்டு
பயங்கரப்பறவைகளை
வேட்டையாடத் தொடங்கினர்.
பசுமை நிறைந்த
புதிய பறவைகளின்
நிழலில்
சிறகுகளின் அர்த்தத்தில்
வானம்
விரியத் தொடங்கியது
நிறமிழந்து சிதைந்து கிடந்த
தெருக்கள்
விளக்குகள் நிரம்பி எரிய
பானைகள் ஏற்றி
பொங்கல் செய்ய
பண்டிகை வெடிகளின் ஒலியில்
சிரித்து
வெற்றியை கொண்டாடின.
முதியவர்களின் ஆசியில்
குழந்தைகளின் கையசைவில்
வெல்வதற்கான
வாழ்த்துக்களை
அள்ளி எடுத்துக்கொண்டு
வேட்டைக்கார போராளிகள்
அம்புகளை எய்தார்கள்.
அசுரக்கூடுகள் தள்ளாடின.
______________________________
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக