_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________
பெருங்காடுகளின் நடுவே
நீண்ட வழியில்
எனது ஊருக்கு
பேரூந்து
போய்கொண்டிருக்கிறது.
சகபயணிகளில்
யாருடையதும்
தெரிந்த முகங்களில்லை
காடுகளின்
பசுமையை
உச்சி துளிர்க்கும் ஆர்வத்தை
இடைஇடையே
உச்சி கருகிய மரங்களை
பட்டமரங்களை
எல்லாம்
விழிகள் மேய்கிறது.
எத்தனை தடவை
பயணம் செய்தாலும்
காடுகளின் வனப்பை
வீதியின்
ஏற்ற இறக்கங்களை
அலுக்காமல்
ரசிக்க முடிகிறது.
இடை இடையே வரும்
மைற் கற்களை
எண்ணியபடி இருக்க
எங்காவது ஒரு சிறு இடத்திலிருக்கும்
தேனீர்க்கடையில்
பேரூந்து ஓய்வெடுக்கும் .
அறிமுகமில்லாத தோள்களில்
சாய்ந்து
தூங்கி விட்டு
மன்னிப்பு தடுமாறும்
சிலமுகங்களில்
பாசமும்
தொடர்ந்துபேச
ஆர்வமும் பிறக்கும்.
வழியில் பெருங்காட்டில்
ஒரு பெரியமரத்தடியில்
வண்டி பழுதுபட்டுவிட
ஓட்டுனர்
நடத்துனர் பயணிகள் சேர்ந்து
வண்டியை
திருத்திக் கொண்டிருப்பார்கள்.
அப்போது அந்த முகத்துடன்
அறிமுகம் பலப்படும்
முகவரிகள்
விசாரித்து கொள்ளப்படும்
நன்மை தீமைகள்
பகிரப்படும்
அப்படியே
சிறுதூரம் நடக்கவும்
மரத்தடியில் அமர்ந்து பேசவும்
நல்ல நண்பர்களாகிகூட விடலாம்.
பேரூந்து தயாராகிவிடும்.
வழியில் பெரிய காட்டுமரம்
முறிந்து கிடக்க
யானைகள் பாதை மாறிவிட்ட
அடையாளங்கள் கிடக்கும்
அதையும் தாண்டி
பேரூந்து ஊரை நோக்கி
போய்க் கொண்டிருக்கும்।
____________________________
தீபச்செல்வன்
6 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக