_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________
யாரும் இந்தவெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்
எல்லோரும்
இந்த மனித விடயத்தில்
தொடர்ந்து மௌனமாய் இருங்கள்
இரக்கமற்ற மௌனத்தின்
நிழலில் எதுவும்
தீர்ந்துவிடப் போவதில்லை
மிஞ்சும் துயரத்திலிருந்து
எல்லாவற்றுக்குமான முளைவரும்.
எமது துயரமும் பயணமும்
கணக்கிடுகிறது
மௌனங்களை விதைத்தவர்
நீங்களே என்று
வனங்களின் அடிக்கல்லில்.
வனங்களைச் சமைத்து
பரவிய பிறகு
தோள்களை நிமிர்த்தி
கோடரிகளோடு
எமது வனங்களுக்குள்
நீங்கள் நுழையவேண்டாம்
மரங்களைத் தறித்து
புதிதாய் பிறக்கும் மனிதத்தை
புதைக்க வேண்டாம்.
எங்கள் நிரந்தர
நிழலின் சூழலுக்காக
இப்போதே புதைகிறோம்.
ஒட்டிய முகங்களுடன்
எங்களைப்பார்த்து எழுதும் கவிதைகள்
வரையும் ஓவியங்கள்
எல்லாவற்றையும்
நீங்கள் கூடி வரவேற்கும் அறைகளில்
மாட்டி வையுங்கள்.
அதிகாரங்களின்
மேன்மை தங்கிய நிலையில்
பலியெடுக்கப்பட்ட உயிரின் கணக்குகள்
எல்லாம் தோற்றுப் போகிறது.
எங்களுடைய மொத்த வலியில்
பொருளாதாரமும் பாதுகாப்பும்
கீறப்படுகிறது.
விமானங்களால் சபிக்கப்படும்
வெளிகளாகவும்
எறிகணைகளால் தேடப்டும்
இலக்குகளாகவும்
நாங்கள் தீர்மானித்தபடி இருப்போம்.
உங்கள் மௌனத்தின் சூழலில்
அசூர வல்லமையில்
எமது அடையாளம் அழிந்து போகும்.
அவர்கள் கருதுகிறார்கள்
நம்புகிறார்கள்.
எல்லாம் அவசாகங்களில்
துடித்துப் போகிறது.
எதிர்பார்க்கவில்லை
நெருப்பு வார்க்கும் வதைகளை
தூக்கிலிட்டு சுருக்கும்
மின்சாரக்கயிறுகளை.
எல்லாமேதான் இங்கு
தீர்ந்துபோகிறது.
எல்லாருமே சிலுவைகளைச் சுமந்தபடி
மரணத்தில் புதைந்துகொள்கிறார்கள்.
எப்போதும் நாங்கள் புதைந்த
இந்த வெளிகளை
திரும்பிப்பார்க்க வேண்டாம்.
புதைகுழிகளைக் கிழறி
விபரம் கேட்கவோ
கணக்கிடவோ வேண்டாம்.
இப்போதே
நாளைய எமது வனங்களின்
வேர்களிடமிருந்து விடைபெறுங்கள்.
__________________________________
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக