_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
______________________
அண்டங்காக்கைகள்
வீட்டு முற்றத்திலிருந்த
மாமரத்திலும்
வேலி ஓரத்திலிருந்த
பனைமரத்திலும்
இருந்து கரைகின்றன.
அவம் மணப்பதாக
நெருப்பை காட்டி
அம்மா
காக்கைகளை கலைக்கிறாள்.
எனினும்
வீட்டை நோக்கி
தூரத்திலிருந்தபடி
காக்கைகள்
கரைந்தபடி இருந்தன.
எதுவும் நடக்கலாம்
என்ற அவத்தின் மீதான
நம்பபிக்கையில்
காக்கைகளை ஏசியபடி
அம்மா திண்ணையிலிருந்தாள்
காக்கைகள்
தமது இறக்கைகளின் பகுதிகளை
கழற்றி போட்டிருக்கலாம்
அவைகளில்
அவத்தின் நாக்குகள்;
காவப்பட்டு அசையலாம்
என்று அம்மா யோசித்தாள்.
சனிக்கிழமைகளில்
இந்த திண்ணையை மெழுகி
விரதமிருந்து
சனியன்கள் தீரும் என்று
நம்புவாள்
காக்கைகளை தேடிப்போய்
கூவி கூப்பிட்டு
சாப்பாடு வைப்பாள்.
அம்மாவிடம்
இப்போது திணிந்திருக்கும்
கொடிய விரதத்தை,
அச்சமூட்டும்படி ஓலமிட்டு
வீடுகளை
எச்சரிக்கும் காக்கைகளின்
கண்மூடித்தனமான
அசிங்கத்தை
வெறித்தபடி கலைத்தாள்.
புற்கள் மண்டி
சருகு நிறைந்து கிடந்த
ஊரின் பிரதான தெருவை
பார்த்துக் கொண்டு
மருந்து தீர்ந்த
வெறும் குப்பிகளை
அள்ளிகட்டினாள்.
சமைத்து நீண்டநாளாகிய
சமையல் பாத்திரங்களை
கழுவி காயவிட்டாள்
அவசிய உணவுப் பொருட்கள்
தீர்ந்தபைகளை
உதறி சுருட்டிவைத்தாள்.
பயன்தரும் பெருமரங்களும்
மூலிகைச் செடிகளும்
சற்று வாடிக்கிடந்தன
அடுப்பை எரித்து
தண்ணீரை வைத்துவிட்டு
அம்மா காக்கைகளை
மறந்து கொண்டாள்.
_________________________
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக