அப்பாவின் குருதியில் தெரு நிறைய எழுதப்பட்ட
மரணச் சுவரொட்டிகள்தான்
இன்றெனது முகவரி.
நேற்றுச் சில சுவரொட்டிகளுடன்
வீடு திரும்பிய அப்பா
கொல்லப்பட்டவனுக்காய் துயரடைந்தார்
கொன்றவனை நினைத்துச் சினமடைந்தார்
நாளைய சுவரொட்டிகளில்
தன் குருதியில்
தன் முகம் வரையப்படுமென அறியாது
இச் சுவரொட்டிகளில்
கனலும் அப்பாவின் குரல் தீரவில்லை
சிவக்கும் அவரின் முகம் மறையவில்லை
வீதியைக் கடந்து செல்லும் நகரவாசிகளே!
காயாத குருதியில்
வரையப்பட்ட என் அப்பாவின் உதடுகள்
உச்சரிக்கும் வார்த்தைகளை புரிந்துகொள்வது
உமக்கு கடினமானதல்ல
அப்பாவை கொன்றவர்களும்
கண்ணீர் விட்டொரு
சுவரொட்டியை என் வீட்டில் முன்னால் ஒட்டினர்
அப்பா! குருதியை உறிஞ்சியவர்களே
கண்ணீர் விடும் ஆச்சரியமும் புதிதல்ல
ஒவ்வொரு மரணச் சுவரொட்டிகளின் முன்னும்
தந்தையர்களுடன் பேசும் குழந்தைகளும்
பிள்ளைகளுடன் பேசும் தாய்மாரும்
காதலன்களுடன் பேசும் காதலிகளும்
குருதிமேல் குருதியாய்
பட்டை பட்டையாய் படிந்திருக்கும்
தடித்தகன்ற சுவரில் விடப்பட்ட
வெற்றிடங்களில்
பிசுபிசுக்கும் பசைகளை பூசியிருப்பது
இத்தெருவில்
நாளை எவரின் முகத்தை ஒட்ட?
அப்பா இங்கெதுவே புதினமல்ல,
நாளை ஒரு சுவரொட்டியில்
எனது முகமும் தென்படலாம்
இனம் புரியாத நோயினால் காலமாகியவனென்றோ
வீதி விபத்தொன்றினால் அகலாமுற்றவனென்றோ
இரு குழுக்களின் மோதலின் இடையில் சிக்கியவனென்றோ
ஆனால், என் மரணச் சுவரொட்டிக்கு முத்தமிட்டுச்
சபிக்கும் என் காதலியின்
நெருப்புதிரும் வார்த்தைகளில்
நொருங்கும் கொலை அரசு
0
2007
தீபச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக