______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
01
பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.
இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.
02
நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை
இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.
03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்
04
வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.
வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்
05
கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.
அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.
06
எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.
07
கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.
08
எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.
நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.
09
படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.
சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.
10
சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்
11
நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.
பசிக்கிறது.
கொஞறுசமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்
மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
___________________________
தீபச்செல்வன்
7 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக