--------------------------தீபச்செல்வன்
------------------------------------------------------------------

இது வாகரை இடப்பெயர்வு
-----------------------------------------------------------------------------
தண்ணீரில்லாத
வரண்ட காடுகளில்
இறப்பர் கூடாரங்களில்
புதிய குடியிருப்புகள்
எழும்பியிருந்தன.
மிகவும் ஆழமான
குழாய்க்கிணறுகளில்
தாகத்தைச் சொல்லிச்சொல்லி
பெண்களும் சிறுவர்களும்
தண்ணீரை மீட்கிறார்கள்.
பொருட்கள் எதுவுமில்லாத
கொட்டில் கடைகளில்
சிறுசிறு போத்தல்களில்
காய்ந்த இனிப்புகள்
விற்பனையற்றுக்கிடந்தன.
தொழில் இல்லாமல்
உழைக்க வேண்டிய ஆண்கள்
தாடி வளர்ந்து முகத்தை மறைக்க
மூலைகளில்
சோர்ந்து கிடந்தனர்
பிள்ளைகள் பசியில்
அழுதுபடி இருந்தார்கள்
நிறைய கூடாரங்களில்
அடுப்பே இல்லாதிருந்தன.
வாழ்விடங்களும் தொழில்களும்
விடுவிற்பதற்கான
நடவடிக்கையில்
பறிக்கப்பட்டு
இவர்கள் துரத்தப்பட்டிருந்தனர்
அவைக்குள்ளும்
புழுதி பிரண்ட
வெள்ளைச் சீருடைகளுடன்
கிழிந்த புத்தகங்களை
சுமந்து கொண்டு
பிள்ளைகள்
மர நிழலில் ஒதுங்கினர்.
அநாதைகளாக்கப்பட்டவர்கள்
அங்கவீனமாக்கப்பட்டவர்கள்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
புழுதியில் உருண்டு
புலம்பிக் கொண்டிருந்தனர்
இராணுவ வண்டிகள்
உறுமிக் கொண்டிருந்தன.
ஊர்களும் மனிதர்களும்
இராணுவ அணிகளில்
புதைக்கப்பட்டு வர
அழிவின் சீருடையில்
இன்னும் நிலங்கள்
விடுவிக்கப்படுமென்று
அறிவித்து
இலங்கைத்தேசியம்
சிரித்தபடி வந்து கொண்டிருந்தது.
இந்தச்சுமைகளை
தலையில் சுமந்து கொண்டு
இன்னும் எவ்வளவு தூரம்
இடம் பெயர்ந்து ஓடுவது.
--------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக