o தீபச்செல்வன் ------------------------------------------------------------------
எந்தப் பறவைகளும் வந்தமராத மரத்தின்
காய்ந்த கிளைகளில்
பழங்கள் காய்த்து கனியும் என்று நம்பியிருந்தோம்
அம்மா அந்தப் பறவைகளை எங்கேனும் கண்டாயா?
அதன் மரம் நீண்ட காலங்களாய் பட்டுப்போயிருந்தது
தலைகளில்
ஒடிந்து விழுந்துகொண்டிருக்கிற முற்றத்தில்
இப்பொழுது எந்தத் தடிகளும் இல்லை
இந்த வருடம்
எங்கள் வீட்டை உடைத்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன்
அச்சம் தரும் நாட்களையே
ஒவ்வொன்றாய் விரித்துக்கொண்டிருந்தது.
வெறும் ஒரு இரண்டு தடிகளைத் தவிர ஒன்றுமில்லை.
பறவைகள் மறந்துபோன எங்கள் கிராமத்தில்
சைக்கிள்கள் உடைந்து உக்கிப்போன எங்கள் நகரத்தில்
ஒரு புன்னகையை பரிமாற
கூடியிருந்து ஒரு கோப்பை மதுவை அருந்துவதற்கு
யாரம்மா இருக்கிறார்கள்?
உன் கைகளில் மலை நேரத்தை கொண்டு வருகிற
தேனீர்க்கோப்பைகளை காணவில்லை
திரும்பாத கிராமத்திற்கும்
இறங்காத நகரத்திற்கும் ஊடாக செல்லும் பேரூந்தில்
நாளை நான் பயணிக்கப்போகிறேன்.
இந்த நாள் கழிந்துபோன வருடத்தின்
இனிப்பாயிருந்த நாட்களையே ஞாபகப்படுத்துகிறது
வெடி அதிரும் இரவு
இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது
யார் யாரே வந்து செல்லுகிறார்கள்
எனக்கு முன்னால் ஏதேதோ கிடக்கிறது
முடிந்து போன இந்த வருடத்தில்
ஏராளமானவற்றை இழந்துபோயிருக்கிறோம்
என் வீடு தேடுகிற தெருக்களில்
வார்த்தைகளற்று என் சைக்கில் அலைகிறது
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது.
அந்தப் பறவைகளையும்
அதன் பட்ட மரத்தையும் அதன் கீழிருந்த எங்கள் வீட்டையும்
எங்களிடம் தருவார்களா?
பட்ட மரம் எரிந்து சாம்பலாகிப்போக
பறவைகள் அதில் புதைந்து போயிருக்கின்றன
வீடு கரைந்துபோன கிராமத்து வெளியில்
எந்த அடையாளங்களுமில்லை
இந்த நாளில் முன்பொரு காலத்தில்
எங்களிடமிருந்த நமது நிலத்தில்
என்னிடமிருந்த புன்னகையையும்
வார்த்தைகளையும் கோரிக்கொண்டிருக்கிறேன்.
01.01.2010
1 கருத்துகள்:
எதிர்காலத்தில்
ஏதேனும் சோகம் வந்தால்
சொல்லி அழ
கொஞ்சமெனும்
மிச்சமிருக்குமா
கண்ணீர்
ஈழத்தமிழரிடம்
எனும் கவிதை வரிகளைப்போல
பறவைகள் வந்தமர மரங்களின்றியும்
அடையாளமற்றதொரு
தெருக்களைகண்டபின்
செத்துப்போன
பறவைகளின்
இறுதி நாட்களை
நினைவூட்டும்
அசத்தலான கவிதை
பாராட்டுக்கள்
கருத்துரையிடுக