o தீபச்செல்வன்
------------------------------------------------------------------
குழந்தைகளுக்கு ஏனைகளை கட்டுவதற்காக
பழைய சீலைகளை
யார் யாரிடமோ வேண்டிக்கொண்டு சென்றார்கள்.
இரவல் சைக்கிள்களில் குழந்தைகளை பின்புறமாக
ஏற்றிக்கொண்டு
புத்தகங்களை கொலுவியபடி அவர்கள் போகிறார்கள்.
இவர்கள் ஒரே நேரத்தில்
தாயாகவும் மனைவியாகவும் மாணவியாகவும்
இருக்கிறார்கள் என்ற கதையாடல்கள்
புத்தகமெங்கும் விரிந்து கிடக்கிறது.
விதவை மாணவிகள் பற்றியும்
கணவன் பிரித்தெடுக்கப்பட்ட மாணவிகள் பற்றியும்
நிறையக் கடிதஙகளை எழுதியிருக்கிறேன்.
அவர்கள் எனக்கெழுதிய கடிதங்களில் வீங்கி வழிகிறது கண்ணீர்.
குழந்தைகள் வெகுநேரமாய்க் காத்திருக்க
வீடுகளுக்காக
மலைநேரங்களில் அலைந்து திரும்புகிறார்கள்.
தங்கள் குழந்தையையும் புத்தகத்தையும் பத்திரமாக
எடுத்து வைத்துக்கொண்டு
தவித்துக்கொண்டிருக்கும் தேனீரை அருந்துகிறார்கள்.
அவர்கள் கோருவது குழந்தைகளுக்காக
பால்மபைக்கற்றுக்களையும்
குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புத்தகங்களை கொண்டு செல்ல
ஒரு துவிச்சக்கரவண்டியையும்.
கொதித்துக்கொண்டிருக்கும் மாலை நேரம்
தேனீர்க்கோப்பைக்குள்
கீழிறங்குகிற சூரியன் விழுந்ததைப்போலிருக்கிறது.
உறவினரின் வீட்டில் தங்கியிருக்கத் தொடங்கி
எத்தனை நாளாகிறது?
காலை முதல் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது.
புத்தகத்தில்
வீடுகள் முளைத்துச் செழிக்கின்றன.
விரிக்கப்பட்ட புத்தகத்தின்
நடுவில்
சைக்கிள்களும்
பால்மாபைக்கற்றுக்களும் கொட்டிக்கிடக்கின்றன.
மாலைநேரத்தையும் தாயின் புத்தகத்தையும்
குழந்தை விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கிறது.
____________________________
10.10.2009 நன்றி:ஆழி ஜனவரி 2010
தீபச்செல்வன்
5 மாதங்கள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக