o தீபச்செல்வன்------------------------------------------------------------------
அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.
யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.
நான் இப்பொழுதும் கேட்கிறேன்
அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்
குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.
என் அன்பு மிகுந்த சனங்களே!
எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க
இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை
நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள்.
எங்கள் கோரிக்கைகளும்
அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும்
நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன.
துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும்
எங்கள் தந்தையே!
ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடையில் பதுங்கியிருந்த வேளை
நடு சமங்களில் எழுந்து நின்று
சிலுவைத் தூக்கியபடி மன்றாடிக்கொண்டிருந்திர்களே!
எங்களுக்கு முன்னால்
இறந்து சிதைந்த குழந்தைகள்தானே வந்து விழுந்துகொண்டிருந்தன.
அரசன் எல்லாக் குழந்தைகளையும்
வெட்டும்படி கட்டளை பிறப்பித்தபொழுது
எல்லாச் சனங்களையும் சிறையிலடைத்துக்கொண்டபொழுது
குழந்தைகளுக்காகவும் சனங்களுக்காகவும்
நீர் உபவாசம் செய்து கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தீர்.
பெற்றோர்களை பிரிந்து துயர் மிகுந்த அறைகளில்
துடித்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு
உணவும் வார்த்தைகளும் கொடுத்த தந்தையே
அரசனின் பழங்கள் குறித்து உங்கள் ஒரே குழந்தைக்கு
என்ன சொல்லப் போகிறீர்கள்?
ஆடைகளை களைந்து சோதனையிடவும்
ஆடைகளை கிழித்து
நிருவாணமாக நாம்மை ஓட வைக்கும்படியும்
அரசனே கட்டளை பிறப்பித்திருந்தான்.
அவனுக்கு நாங்கள் பொன்னாடை போர்த்தியிருக்கிறோம்.
எங்கள் நிர்பந்தங்களும் சபிக்கப்பட்ட வாழ்வும்
ஒவ்வொருவரையும் கொலை செய்துகொண்டிருக்கிறது.
எங்கள் கனவை சிதைத்துப்போட்டவன்
நிலத்தை அள்ளிச் சென்றவன்
தெருக்களை சூறையாடியவன்
குழந்தைகள்மீது பிரமாண்டமான சிறையினைப் பின்னியவன்
சனங்களின் குருதியில் முகம் கழுவிக்கொண்டிருந்தவன்
தந்திரமான கதிரையால் வனையப்பட்ட
கூடையில் யுத்ததில் பிடுங்கிய பழங்களை கொண்டு வந்திருக்கிறான்.
அவற்றை நாமும் புசித்து குழந்தைகளினது
கைகளிலும் சொருகி
சனங்களின் குருதியில் நனைந்த பூக்களை பரிசளித்திருக்கிறோம்.
அரசன் அழகான பூக்களுடன் செல்லுகிறான்.
_________________________
10.01.2010
3 கருத்துகள்:
தனது கட்சியில் இருந் விலகி தன மீது சேறு பூசும் மங்கள சமரவீர போன்றவர்களை எதுவித அச்சுறுத்தலும் இன்றி சேறு பூச அனுமதிக்கும் ஜனநாயகத்தை பேணும் போக்கு மகிந்தவின் மாற்று கருத்து தனி மனித சுதந்திரம் மீது கொண்ட அக்கறையை காட்டி நிற்கின்றன.
அதே வேளை தனது ஆத்திரங்களை எல்லாம் துப்பாக்கி மூலம் கிறநைட் மூலமே தீர்த்து பழகிய எவரோடு சேர்ந்தாவது அதை சொல்லியாவது அதை செய்தாவது ஜனாதிபதி கதிரையில் குந்த முனையும் பொன்சேகாவோ தனது வெற்றிக்காகவே தன ஆத்வாளர்களை கொலை செய்து மகிந்த மீது அந்த பழியினை போட்டு வாக்குகள் பெற முனைவது என்பது உறுதி.
அநியாயமாக் சிலர் தேர்தலுக்கு முன் பலியாகப் போகிறார்கள்
தீபனுக்கு,
உங்கள் கவிதைகள் காலத்தின் சாட்சிகளாய் உயிர்வாழத்தக்கவை. எனினும் எம் வாழ்வு மீது எழுதப்பட்ட விதி யார் அழுதும் போகாத ஒன்றுதானே?
அஜந்தகுமார்
பெயரில்லா நண்பரே!
நாங்கள் எங்கள் மக்களின் மனம் வதைபடுகிற சுறண்டப்படுகிற ஏமாற்றப்படுகிற தருணங்களையே கண்டு துயருகிறோம். மங்களவோ! சரத்தோ எங்களைப்பொறுத்தவரை மகிந்த மாதிரியான ஆட்களே. எங்கள் குழந்தைகளுக்கு ஒரு உலகம் வேண்டும். எங்கள் அரசியல் தலமைகளை தன் அரசியலுக்காக பயன்படுத்துகிற மகிந்த அல்லது ஏனைய தலைவர்கள் எங்கள் இனத்திற்கு முரணானவர்கள்.. மகிந்தவிடம் தனிமனித சுதந்திரம் இருக்கிறதா? அவரிடம் ஜனநாயக மதிப்பு இருக்கிறதா? கடந்த காலங்'களில் எங்கு போயிருந்தீர்கள்? சரத் மகிந்தவின் இன்னொரு வடிவம்தான்...
பெயரில்லா நண்பரே வருகைக்கு நன்றி...
கருத்துரையிடுக