o தீபச்செல்வன் ----------------------------------------
புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில்
வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில்
அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது
கடவுள்கள் எங்களை கைவிட்டதாய்
ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும்
பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள்
ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை
பராசக்தி ஏன் கைவிட்டாள்?
யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின்
எந்தச் சித்திரவதைகளையும்
பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள்.
வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை
இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன
ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில்
என்னை கைகளில் அம்மா நிரப்பி வைத்திருந்தாள்
என்னை இழுத்துச் சென்றுவிட்டு வேர்களால் கரமளித்து
கரையேற வைத்தது ஆறு.
மூடியிருக்கும் ஆற்றங்கரையில் சிதைவடைந்த
கரைகளைக் காண முடியவில்லை.
கனவுக்காக சிந்திய அம்மாவின் உதிரம்
ஆற்றங்கரையில் படிந்திருக்கிறது.
கிளைகளை இழந்த நாவல் மரத்தில்
ஊஞ்சல்களை கட்டி தங்கை எப்படி ஆடப்போகிறாள்?
பட்டுப்போகாத அதன் வேர்களை தடவும் அம்மாவின் புன்னகையில்
அது ஆதி நிழலை பெய்கிறது
நாவல் மரத்தின் கீழாய்
நாவற்பழங்களை பொறுக்கும் குழந்தைகளை காணவில்லை.
சுவர்களை தேடும் அம்மா
உக்கிய கடவுகளின் புகைப்படங்களை எடுக்கிறாள்
அண்ணாவின் புகைப்படம் அழிந்து போயிருந்தது.
இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதானி மரம்
மற்றும் சில பூவரச மரங்கள்.
பாதி நிழலை வைத்திருக்கிறது மருதமரம்.
சாம்பல் சுவடுகளின் மேலாய் நாட்டப்பட்டிருக்கிறது புதிய கூடாரம்.
வானத்தின் காயம் ஆறிவிடும் என அம்மா நம்புவதைப்போல
மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்.
தாழ்நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன.
கனவுகளின் பாத்திகளும் வரம்புகளும் உருக்குலைந்துபோக
எறியப்பட்ட பனை விதைகள் வடலியாய் வெடித்திருக்கின்றன
எங்கள் புன்னகை ஆற்றங்கரையை விட்டு
பெயர்ந்துபோன எல்லாப் பறவைகளையும் அழைத்துக்கொண்டிருக்கிறது.
__________________________
09.05.2010, இரத்தினபுரம், கிளிநொச்சி.
“எனது அம்மா மற்றும் தங்கை கடந்த வருடம் மே 16ஆம் நாள் இறுதி யுத்தத்தின் முடிவில் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்ட யுத்தத்திற்கான தண்டனைகளை முடித்துக் கொண்டு 09.05.2010 அன்று நாங்கள் வாழ்ந்த காணி நிலத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்”
புகைப்படம் : இரத்தினபுரத் தாழ் நிலப்பகுதியில் இருக்கிற எனது கூடாரம். (செப்டம்பர்) இம்மாதம் பெருமழைக்கு பாதுகாப்புத் தேடிக் கட்டப்பட்டது.
4 கருத்துகள்:
அழகான ஒரு பதிவு நண்பா .,வலிகளை உணர முடிகிற கவிதைகள் உன்னுடையவை ..
உண்மையை உரத்துச் சொல்ல தயங்காத தோழனே
உன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்
கவிதை தருகின்ற வலியை விட உங்கள் வீடு பற்றிய குறிப்பு மனதை வருத்துகிறது. இதுதான் எங்கள் மக்களின் அவலம் நிறைந்த வாழ்வாக இருக்கிறது.
வாழ்க்கையும் இலக்கியமும் இணைகின்ற புள்ளிகள் இவைதான். யாரிடம் சொல்லியழுவது. இப்படி எழுதுவதன் மூலம் உள்ளத்தின் பாரம் கொஞ்சமாவது குறையட்டுமே.
- துவாரகன்-
//வானத்தின் காயம் ஆறிவிடும் என அம்மா நம்புவதைப்போல
மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்//
இதில் உங்களுக்கு நம்பிக்கையில்லை போல உணரவைக்கிறீர்கள்.... நம்பிக்கைதானே வாழ்வின் பற்றுக்கோடு. நம்பித்தான் ஆகவேண்டும். வாழ்த்துக்கள் தீபன்
கருத்துரையிடுக