- தீபச்செல்வன் ----------------------------------------
01
டெனிஷா என்னைப் பார்த்துக் கையசைக்காதே!
நிலத்திற்காய் தவிக்கிற உனது முகத்துயர்
கைவிடப்பட்ட சனங்களின் தோல்வியாய் வழிகிறது
நான் வெகு தூரத்திற்குச் செல்ல முடியாது
இன்றும் வழி மறிக்காததால் உன்னைப் பார்க்க முடிந்தது
மீண்டும் மீண்டும் இடர் நிலத்தில் ஒலிக்கும்
உன் குரலை என்னால் கேட்க முடியாதிருக்கிறது.
அந்த தீர்வு நாள் வருகிறது
முட்கம்பிகளை உடைத்துக் கொண்டு
உன் காணிக்குள் செல்லப் போகிறாய்.
வா! நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
கைகளை தட்டிப் பறித்தெடுப்போம்!
பாம்புகளும் பூச்சி பூரான்களும்
உனது கூடாரத்தை சுற்றி வளைக்கின்றன
டெனிஷா எனக்கும் புன்னகைப்பதற்கு கற்றுத்தருவாயா?
நான் ஒரு பயங்கரவாதி என்பதை
டெனிஷா நீ அறிவாயா?
இந்தப் பயங்கரவாதியால் பாதுகப்பிற்கு அச்சுறுத்தல்
என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்
ஆனாலும் நான் இந்தத் தெருக்களால் செல்லுவேன்
இடர் படிந்த நிலத்தில் துயருடனிருக்கிற
உன் போலான குழந்தைகளை பார்க்க வேண்டும்.
சனங்களை மீண்டும் பெயர்ந்து செல்லச் சொல்லும்படி
அறிவிக்கப்பட்ட பொழுது
டெனிஷா மறுத்தபடி அழுதாள்
இந்த நிலம் அரசனால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது
காடுகளையும் மண்ணையும்
தின்று கொண்டிருக்கும் அரசன்
இந்த நிலத்தின் மேலால் பறந்தபடியிருக்கிறான்
குழந்தைகள் நிலமின்றி என்ன செய்யப் போகின்றனர்?
இன்னும் பறவைகள் திரும்பவில்லை
காவலின்றி கிடக்கும் நிலம் யாரின் கையில் இருக்கிறது
டெனிஷா முதலான குழந்தைகள் கேட்கத் தொடங்குகின்றனர்.
02
முன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது
குழந்தைகள் மகிழ்ந்திருந்தனர்
இந்த நிலத்தை போராளிகள் காவல் செய்தனர்.
நவீன படைகளின் தளபதியான புத்தர் படையெடுத்து
அரசமரங்களில் ஏறி
நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுது
சனங்களின் நிலத்தில் அரசனின் நிழல் விழுந்து கொண்டிருக்கிறது
அரசன் கோயில்களை தின்கிறான்
அரசன் குளத்தை குடிக்கிறான்
அரசன் காடுகளை மேய்கிறான்
சாம்பல் கால்களை அணிந்து
நமது நகரங்களுக்கு வாளுடன் வந்து செல்கிறான்.
கொலை செய்து படைத்து வைத்திருக்கும்
என் முகத்தை அவர்கள் பல கோணங்களில் கமராக்களில்
பிடித்து வைத்திருக்கிறார்கள்
எல்லா வார்த்தைகளும் ஒரே தீர்ப்பைத்தான் பரிசளிக்கின்றன
நான் என்னை அழித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பயங்கரவாதி
இரவு நகரத்தில் இறங்கியிருந்த பொழுது
காதுகளில் உனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது
உனது காணியை நோக்கி மிதிவெடிகளுக்குள்ளால்
ஊடறுத்துச் செல்ல உன்னுடன் நானும் வருகிறேன்.
டெனிஷா உனக்கும் எனக்கும் ஒரு கூடாரத்தைகூட தராதிருக்கிறார்கள்
அழகான வீடு என்பது எப்படியிருக்குமென
நீயோ நானோ அறிந்திருக்கவில்லை
கூடாரங்களும் மரங்களும் பற்றைகளும் மண்ணுமாய்
காலத்தை கழிக்கிறோம்.
இடர் நிலத்தில் இன்னும் ஏன் இப்படி துயரம் நிகழ்கிறது?
______________________
புகைப்படம் பொன்னகர் குழந்தை டெனிஷா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக