0 தீபச்செல்வன் ----------------------------------------
வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தை
துண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்
இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறு
சனங்கள் பணிக்கப்பட்ட வேளையில்
குழந்தைகள் வெருண்டழுது
கைகளால் நிலத்தை தொடுகின்றனர்
ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்
ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.
விரக்தியையும் ஏமாற்றத்தையும்
தவிர என்னிடம் எதுவுமில்லை
கொள்ளைக்காரர்கள் நம்பிக்கையை முறியடிக்கிறார்கள்
மீண்டும் மீண்டும் நிலத்தில் எத்தனை கைகள் உதைக்கின்றன?
நிலத்தை அள்ளிச் செல்ல
எத்தனை விதிகளை எழுதுகின்றன?
பிறந்து கிடந்த நிலத்தை கொள்ளையடிக்க
எத்தனை வடிவங்கள் அலைகின்றன?
வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்ட
துயரைத் தின்று களிக்கும் காலத்தில்
எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!
அமைதியற்று தெருக்களில் பறிக்கப்பட்ட நிலத்தின்
பறிக்கப்பட்ட நிருபங்களுக்காக
அலையும் சனங்களிடம் இல்லை துளிர்விடும் வார்த்தைகள்
குந்தியிருக்கும் நிலங்களை தின்று
சனங்களை வதைக்கும் காலம் நம்மை அச்சுறுத்துகிறது
வாழ் நிலக் கனவின் வாக்குமூலங்களை நிராகரித்து
நிலத்துடன் கொல்லப்படுகின்றனர் சனங்கள்.
கைவிடப்பட்ட சனங்களுக்காய்
நிலத்திற்காய்
அழுதலையும் குழந்தைகளுக்காய்
குந்தியிருக்க ஒரு துண்டு நிலத்திற்காய்
பிரார்த்தனை செய் தோழி!
தாழ் நிலம் மேலுமாக தாழ்த்தப்படுகிறது
ஆறுகளுடன் மருதமரங்கள் துடித்தசைகின்றன.
தவிக்கும் தாயே உனது கண்ணீரும்
உன் பிள்ளைகளின் குருதியும்
இந்த ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறது
தாழ் நிலக்குழந்தைகளே நாம் எங்கு செல்வது?
குருதியும் கண்ணீரும் காயாத நிலத்தை
துயர் இன்னும் ஈரமாக்குகிறது.
தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக
நகரம் நகரமாக
நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
அகலமான கைகள் நிலமீதலைகின்றன
தயவு செய்து
எனது நிலத்திற்காக தொடர்ந்து பிரார்த்தியுங்கள்!
______________________
நம்பர் 2010
குறிப்பு :- நான் வசிக்கும் இரத்தினபுரம் தாழ்நிலப்பகுதியில் உள்ள 25 இற்கு மேற்பட்ட குடிகளை நிலத்தை விட்டு பெயர்ந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்டி புறநகர்ப் பகுதியிலுள்ள இரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் இந்த மக்கள் கிளிநொச்சியினை பூர்வீகமாக் கொண்டவர்கள்.
2 கருத்துகள்:
//வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்ட
துயரைத் தின்று களிக்கும் காலத்தில்
எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!//
----------------------------------------------!!
you are my brother not in words but in my heart.
கருத்துரையிடுக