தீபச்செல்வன்
தமிழ்ச்செல்விக்கு ஒரு கூடாரம் இருக்கிறது
இழந்த வாய்க்கால்களையும் மணல்தரைகளையும்
அவள் திரும்பிப்பார்ப்பதில்லை
தெருக்களில் அழியாத நினைவுகள் வாடியிருப்பதையும்
அவள் பார்ப்பதில்லை
யாரிடமும் கருணையையும்
அரவணைப்பையும் எதிர்பார்ப்பதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அம்மா இருந்தார்.
தமிழ்ச்செல்விக்கு ஒரு குடும்பப்பதிவு அட்டை இருக்கிறது
நிவாரணங்களுக்காக அவள் முண்டியடிப்பதில்லை
அவளுக்காக வழங்கப்படும்
அரிசிப் பொதிகளையும் சுமக்க முடிவதில்லை
அவளுக்காக வழங்கப்படும் தறப்பாலையும் தகரங்களையும்
கொண்டுவர முடிவதில்லை
தமிழ்ச்செல்விக்கு முன்பு அப்பா இருந்தார்.
தமிழ்ச்செல்விக்கு முன்பு இரண்டு சகோதரர்கள் இருந்தனர்
இப்பொழுது வீட்டின் பின்பக்கமாவே முற்றித்திலோ
அவள் விளையாட நினைப்பதில்லை
அவள் மண்வீடுகளை கட்டுவதில்லை
கண்கள் மூடித் திறக்கும் பொம்மைகளை விரும்புவதில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு சில பொம்மைகள் இருந்தன.
தமிழ்ச்செல்விக்கு முன்பு ஒரு கடவுள் இருந்தது
இப்பொழுது அவளிடம் கோயில்களும் இல்லை
செய்வதற்கு எந்தப் பிரார்த்தனைகளும் இல்லை
கடாட்சங்களையும் திருவருள்களையும் அவள் அறிந்ததில்லை
தமிழ்ச்செல்வியிடம் முன்பு அழகான உலகம் இருந்தது
இப்பொழுது அவளிடம் யாருமற்ற நிலம் இருக்கிறது.
__________________________________
நன்றி - கல்கி
புகைப்படம் : கொக்கிளாய், புளியமுனைக் குழந்தை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக