குழந்தைகள் அலைய
பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது
ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்
பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது
தாய்மாருக்காய் அழுதழுது
கண்ணீர் விடும்
குழந்தைகள் வாழும் யுகத்தில்
கனத்தன வீடுகள்
குழந்தைகளுக்காய் அழுதழுது
கண்ணீர் விடும்
தாய்மார்கள் வாழும் யுகத்தில்
கனமடைகிறது பூமி
தாய் கட்டிய சுவர்களில்
கனவின் காட்சிகள் நெளிந்தன
நிலம் மெழுகும் தாயின்
விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள்
தொலை தூரத்தில் தவித்தன
அடுப்பில் பொங்கியது துயரம்
இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க
இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர்
தாய்மார்கள் குழந்தைகளாகி
அழும் யுகத்தை சபித்தது யார்?
ஏங்கும் விழிகளை
துடிக்கும் வார்த்தைகளை
கண்ணீர் படிந்த முகங்களை
துயரேடிருக்கும் காலத்தை
தாய்மார்களுக்கு வழங்குவது யார்?
0
தீபச்செல்வன்
நன்றி : கணையாழி - மார்ச் 2011, செல்வா அம்மா நினைவு மலர்
1 கருத்துகள்:
"தாய்மார்கள் குழந்தைகளாகி
அழும் யுகத்தை சபித்தது யார்?”
வலிதருகிற கவிதைக் கேள்வியின்
ஆழத்திலேயே வழிகிறது கண்ணீர்.
கருத்துரையிடுக