அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்
அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது
சிதைமேட்டில் அழிக்க முடியாத
உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது
உடைத்தெறியப்படுவதும்
சிதைத்து புதைக்கப்படுவதும்
யாரோ ஒருவருடைய பிள்ளையை.
நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?
எதிலும் நிரப்ப முடியாத
எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள்
உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா?
அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா?
பெற்றவர்கள் யாரோ எல்லாம்
இருதயத்திற்குள் அடித்தழுது
புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன.
யாரோ ஒருவருடைய பிள்ளை
ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது
நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில்
உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கிறார்கள்
புகை எழும்புகிறது
விளக்குகள் எரிகின்றன
எருக்கலை வேர்களைச் சுற்றி
யாரோ கூடியிருந்து பேசுகிறார்கள்.
முன்பொரு காலத்தில் இந்தச் சனங்கள் பிள்ளைகளை
பெற்று ஏதோ ஒன்றுக்காக அனுப்பியிருக்கிறார்கள்
எல்லாவற்றுக்காகவும் உதைத்து இடிக்கப்படும்
ஒவ்வொரு கல்லறையிலும்
நீள உறங்கிக் கொண்டிருந்த
யாரோ ஒருவருடைய பிள்ளை உறக்கமற்றலைகிறது.
தீபச்செல்வன்
நன்றி பூவரசி
2 கருத்துகள்:
அருமையான,மனதை நெருடிவிட்ட கவிவரிகள்..அன்று கோவிலாக தொழுத இல்லங்கள் இன்று ?????????
”இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீ்ர் சிதைகளை மறைக்கின்றன ”அருமையான,மனதை நெருடிவிட்ட கவிவரிகள்..அன்று கோவிலாக தொழுத இல்லங்கள் இன்று ..வார்த்தை வரவில்லை
கருத்துரையிடுக