தீபச்செல்வன்
மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட
உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன
நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?
என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே
தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன
நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை
வரலாற்றில் பரப்பிச் செல்லும்
பாலியாறு என்ன தவறிழைத்தது?
நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை
வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன
மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை
யாருடைய கால்த்தடங்களுமில்லாத
பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது
ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து
மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன.
குருதியை நிலத்திலிருந்து துடைத்து ஆற்றில் எறிந்திருக்கிறார்கள்
பாலி ஆறு நெளிந்தபடி கடலைத் தேடுகிறது
உடல் பரிசோதிக்கப்பட்டு
அனுமதிபெறப்பட்டு
கால் நனைத்து முகம் நனைக்கையில்
நம்மோடு இந்த ஆறும் அடிமையாயிருந்தது.
மருது மரங்கள் துயர்க்கோலமாய்
வளர்ந்து கிளைகளை வீசியிருக்கின்றன
யாரும் உள் நுழைய முடியாதபடியிருக்க
ஆறு தனித்து துயரோடு நீண்டு செல்கிறது.
பச்சை சமையல் பாத்திரங்கள் கழுவப்படும்
ஆறாய் அடங்கிக் கிடக்கிறது
துப்பாக்கிகளின் நிழல் விழுந்து அடக்கி
நீரோட்டத்தை குழப்பும் ஆறாய்க்கிடக்கிறது
பச்சை உடைகளும்
பச்சை சுவர்களும்
பச்சை முகாங்களும் பச்சை காவலரண்களும்
மூடியிருக்க ஆற்றங்கரையினில் பறக்கின்றன
ஆற்றில் துவைக்கப்பட்ட பச்சை உடைகள்.
ஒட்ட முடியாத பச்சைகள் மதிக்கின்றன
செழித்து நமது வரலாறு பரவிப் பாயும் ஆற்றின்
வலிமையையும் நீட்சியையும்
நாம் மீண்டும் பெறுவோமா?
மீண்டும் நாம் நீந்தி மூழ்க முடியுமா?
பாலி ஆற்றுப் பக்கமாக தாகத்தோடு
சில குழந்தைகள் தண்ணீர் கோப்பைகளை
இறுகப்பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர்.
அசையாத மணிகளும் யாருமற்ற பல வீடுகளும்
தயங்கி விளையும் பயிர்களும்
துரத்தப்பட்ட மனிதர்களைத்தான் தேடுகின்றன.
நீ வருவாயா உன் கவிதைகள் விளைந்த
பாலியாற்றில் நீந்திச் செல்ல?
மூட முடியாது விரியும்
தடுக்க முடியாது நீளும் பாலியாறு
இன்னும் மெல்ல மெல்லவாக
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனினும்
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?
பின்குறிப்பு :
'பாலியாறு நகர்கிறது' என்பது ஈழக் கவிஞர் ஜெயபாலன் 1968இல் எழுதிய அவருடைய முதல் கவிதை. இக்கவிதைவன்னியில் மல்லாவியில் உள்ள பாலியாற்றை பற்றியது. ஜெயபாலன் வன்னியில் மல்லாவியில் வாழ்ந்து தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். வன்னியின் வளத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலியாற்றை தற்பொழுது இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவத்தின் வசம் வீழ்ந்துள்ள பாலியாற்றுக்கு 2011இல் சென்ற பொழுது ஜெயபாலனை விழித்து எழுதியது
-பூவரசி 2012 ஜனவரி
2 கருத்துகள்:
அறியாத தகவலை கவிதையாக வடித்துள்ளீர்கள்... வரிகளின் அந்த வலி தெரிகிறது...
மெல்ல நகரும் பாலியாற்றில்
விழுந்து கரைகிறது
நம் நினைவுகளின் உப்புத்துளிகள்.
கருத்துரையிடுக