எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா
நள்ளிரவுகளின் காலத்தில்
இருண்ட தேசத்தில்
சூரியனுக்காய் காத்திருக்க
சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க
கைகளால் மூட முடியாத
மழை இடியோடு பெய்கிறது.
வீழும் பொழுது அழுது
மீளும் பொழுது தொழுது
கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில்
தாய்மார்களின் அடி வயிறுகளில்
கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன.
வீட்டு மூலையில் விளக்கெரியும்
கார்த்திகை மாலைப் பொழுதில்
விளக்குகளை தூக்கி வந்து
மழையில் நீர் சொட்டும்
தென்னங் கீற்றுக்களில் ஒளிரும்
உங்கள் முகங்கள் கண்போம்.
மூட முடியா மழை
கொல்ல முடியா மரங்களில் பெய்ய
அழியா முகங்கள் மனங்களில் தெரியும்
அணைக்க முடியா விளக்குகள்
தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது.
தீபச்செல்வன்
நன்றி - வானவில், தீராநதி ஜனவரி 2013
2 கருத்துகள்:
வேதனை அளிக்கும் உண்மை வரிகள்...
அற்புதம் !
தம்பி எழுதுக இன்னும் ஒரு நூற்றாண்டு !!
கருத்துரையிடுக