மழைநாளொன்றில் இருண்டபோன நகரத்தைச்
சுற்றிவளைத்து உன்னைத் தேடியவர்கள்
வீட்டின் கோடியைக் கிளறும்பொழுது
வெளித்தெரிந்தன புதைத்து வைக்கப்பட்ட கவிதைகள்
படுக்கையறையிலிருந்து வெடிகுண்டையும்
சமையலறையிலிருந்து ஆணுறையும்
கடவுளறையிலிருந்து ஆபாசப்படங்களையும் மீட்தாக
நகரமெங்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்
எதிரிகள் ஆக்கிரமித்திருக்கும்
நம்முடைய நகரத்தில்தான் நடத்தப்பட்டது
பழி சுமத்தும் சுவரொட்டிகளுடன்
உனக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்
மழையில் நனைந்தபடி
கைகட்டி நின்றனர் நம்முடைய நகரின் சனங்கள்
எதுவும் நடக்கக்கூடிய நம்முடைய நகரத்தில்
கை நிறையப்பொருட்களுடன்
வருபவர்கள் யாருடைய பொக்கற்றிலும்
சொருகிச் செல்லக் கூடும் எதையும்
பூவுக்கு ஏங்கும் குழந்தையின் கனவை எழுதிய
உனது கைகளுக்கு விலங்கிடப்பட்டது
நீ பிறந்த நகரில் நான் ஒளித்து வைத்திருக்கிறேன்
உன்னுடைய ஐந்து கவிதைகளை
நான் கண்டேன்
விலங்கிடப்பட்ட ஒரு பறவை சுற்றிக்கொண்டிருந்தது
மழைநாளில் நனைந்து காயாதிருந்த நகரத்தை.
தீபச்செல்வன்
பொன்.காந்தனுக்கு
2013
நன்றி - காலம் இதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக