மயானம் ஒன்றைப்போலிருக்கும்
இந்த நகரில்
அன்று தனிமையிருக்கவில்லை
வர்ணமிகு இரவு விளக்குகள் பூட்டப்படவில்லை
வீதி அகலமாக்கப்படவில்லை
எண்ணற்ற விளக்குகள் எரியவிடப்பட்டபோதும்
நகரத்தை முடியிருக்கும்
இந்த கொடு இருள் அன்றிருக்கவில்லை
அந்நிய மொழியில் எழுதுவும் எழுதப்படவில்லை
ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் குடியேறவுமில்லை
மரண வீடு ஒன்றைப்போல
கடாசிப்பூமரங்கள் நாட்டப்பட்டிருக்கவில்லை
எந்த பேயும் உரைநிகழ்த்தவில்லை
கொலையாளிகளின் படங்களெதும் தொங்கவில்லை
இப்படித் தனியே அலையுமொருவனைப்
பார்த்திருக்க முடியாது
எங்கு சென்றனர் என் சனங்கள்?
இப்படித் தனித்திருந்து
ஒரு கவிதையை எழுத நேரிடுமென
நினைத்திருக்கவுமில்லை
ஏதோ இருந்தது
நாமிருக்கவும்
சிரித்திருக்கவும்
அன்று நாமிருந்தோம்
நான் மகிழ்ந்திருந்தேன்
இங்கு உன்னத வீரர்கள் எம்மை சூழ்ந்திருந்தனர்
எங்கள் நகரம் எங்களுக்காயிருந்தது
இன்று, காணவில்லை ஒரு கிளியையும்
2014
தீபச்செல்வன்
நன்றி: ஜீவநதி (ஈழக் கவிதை சிறப்பிதழ்)
1 கருத்துகள்:
அழகான வெளிப்பாடு
கருத்துரையிடுக