புதர் மண்டிய இருண்ட சமூத்திரத்தின்
மேற்பரப்புப்போல
இறுகத் தாழிடப்பட்ட என் கதவுகளை
சூரியன் ஒருபோதும் தட்டியதில்லை
இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு
அழிக்கப்பட்ட குடி நிலத்தின் வரைபடம்போல
தழும்புடல்களைக் கொண்டவென்
சிறுவர்கள் எவரும்
பள்ளிப் பேருந்தின் சாளரங்களைத் திறப்பதில்லை
யுத்த டாங்கிகளுக்குள் எனது வீதி
நூற்றாண்டுகளாய் மண்ணுள் புதைக்கப்பட்டாற்போல
உருவழிக்கப்பட்டுப் புன்னகை இழந்த
நம் புரதான நகருக்கு
எப் பறவைகளும் வருவதில்லை
காவலரண்களுக்குள் எனது நகரம்
வாய் பிளந்த பீரங்கிக்குள் இருக்கும்
பதுங்குகுழியைப் போலான தேசத்தில்
எப் பாடல்களும் கேட்பதில்லை
சோதனைச் சாவடிகளுக்குள் எனது நாடு.
0
தீபச்செல்வன்
நன்றி - நக்கீரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக