தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.
'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.
'இனி ஒருபோதும் உங்கள் பாடல்களைப் பாட முடியாது' என்ற
ஸ்பானிய அரசனின் வார்த்தைகளை எழுதிய
பழைய நாட்குறிப்பை தன் கைப்பையில் வைத்திருந்த அந்த மூதாட்டி
'மகளே! மாண்டுபோன பின்னர் எழும் நினைவுக்கல்லில்
எழுதுவதற்கு மாத்திரம் உரியதல்ல எம் தாய்மொழி!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.
'இனி உலகில் ஒரு நாடு சாத்தியமில்லை' என
பிலிப் மன்னன் எக்காளமிடுகையில்
பொக்கை வாய் நிறைய சிரித்த அந்த மூதாட்டி
'மகனே! வஞ்சிப்பவர்களின் கைகளில்
ஐக்கியத்தின் வாசனை இருப்பதில்லை
நம்முடைய பூர்வீக இராட்சியமே பாரபட்சத்தின் முடிவு!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.
சுதந்திரத்தைத் தவிர
எதனாலும் பெறமுடியாத புன்னகைகயை கொண்டிருக்கும்
ஒவ்வொரு கத்தலோனிய முகங்களிலும்
இன்னும் துடிதுடிப்போடு திரியும் அந்த மூதாட்டி
'புதல்வர்ககளே! நாம் ஸ்பானியர் அல்ல, கத்தலோனியர்
என்பதை வரலாறு மறந்து போனால்
உம் குழந்தைகளின் பெயர் அகதி என்றே முடியும்' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.
நன்றி: கல்கி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக