Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 19 மே, 2018

'போர் இன்னும் ஓயவில்லை'


மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன்
உறவினர்களின் ஈமக் கிரியைக்காக
விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று
குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில்
என் பழைய கவிதைகளில் ஒன்றைப்
பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா

இப்போதும் நினைவி்ருக்கிறது
போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும்
அவர்கள் கொல்லப்பட்ட லட்சம்
சனங்களின் சடலங்களை
ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக
அழித்து முடித்திருக்கக்கூடவில்லை
காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து
புழுக்கள் கொட்டித் தீரவில்லை
திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து
தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல
எல்லாம் முடிந்துவிட்டது
இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும்
வெள்ளையடிக்கப்பட்ட புதிய வீடுகளும் கிடைக்கும் என்றாய்
யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்தும்
அதன் கதைளை நீ ஏன் நிறுத்தவில்லை என்றாய் நேற்றும்
வகுப்பில் பதினொரு வயதுச் சிறுவன் ஒருவனுக்குச்
சிறுநீருடன் குருதி வெளியேறுகிறது என்றாள் தாயொருத்தி
போரில் தந்தையை இழந்த மற்றொரு பதினாறு வயதுச் சிறுமி
ரத்த அழுத்த மருத்துவ முகாமுக்குச் சென்று வந்திருந்தாள்
உனக்குச் சலிப்பூட்டும் உடைந்த வெண்கட்டிளால்
எழுதும் இக்கவிதைகளுக்காக
நீ ஒருபோதும் அழத் தேவையில்லை
இந்த நிலம் உன்னுடையதில்லை என
எழுதிச்செல்லும் வாசகங்களும்
என் பிள்ளைகளைத் தாருங்கள் எனக் காத்திருக்கும் தாய்மார்களும்
சாதாரணமாகிவிட்ட தெருக்கள் இருக்கையில்
இவை குறித்தெல்லாம் உனக்கு வருத்தம் இருக்காது நண்பா!

போரின் நெடு மௌனத்தைக் கலைக்காது
சிமென்ட் கொண்டும் காபெற் கொண்டும்
காயங்களைப் பூசி அழித்துவிடலாம் என அவர்கள் நம்பும்போது
இந்த நூற்றாண்டின் கொடும்போர் ஒன்று
ஒரு கணத்துடன் முடிந்துபோனது என நீயும் நம்புவாய்!
ஆம் நண்பனே, போர் அந்தக் கணத்துடன் முடிந்தேவிட்டது என்பதை
நானும் வெற்றுத் தோட்டாவால் எழுதிச் செல்கிறேன்.

- தீபச்செல்வன்

ஆனந்த விகடன் மின்னிதழ்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

மகாவலி



உடலெங்கும் சிங்கக் கோடுகளில்
இராட்சத பாம்புபோல
காவி நிறத்துடன் நுழையுமொரு நதி
மென்று விழுங்கியது என் காடுகளை

நதியின் பெயரால்
துடைக்கப்படும் தேசத்தில்
முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள்

தெற்கிலிருந்து
பண்டாவையும் புத்தனையும்
யுத்த டாங்கிகளையும்
அள்ளி வரும் நதி
எம் தலைநகரிலிருந்து
ஒரு வார்த்தையேனும்
எடுத்துச் சென்றதில்லை
எம்மீது நதியின்
ஒரு துளியும் பட்டதில்லை

பீரங்கியிலிருந்து பாயும்
குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே
சிவந்த கண்களுடனிருக்கும்
மாவிலாறு போலொரு சிறுவனும்
முகம் மறைக்கப்பட்ட
மணலாறு போலொரு சிறுமியும்
தாகத்துடன் அலைவதைக் கண்டேன்

எல்லோரும் விழித்திருக்கும் பொழுதில்
துப்பாக்கியை ஏந்தியபடி வீட்டுக்குள் புகும்
ஒரு இராணுவத்தினன் போல
என் நிலத்தில் நுழைகிறது மகாவலி.

தீபச்செல்வன்

2017

செவ்வாய், 20 மார்ச், 2018

பயங்கரவாதியின் மகள்


இறந்தேனும் தன் துணைவனைக்
கண்டுகொண்டாள் அவள்
இப்படி ஒரு நீள் பிரிவு
எந்தப் பெண்ணுக்கும்
கிடைத்துவிடக்கூடாதென.

ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி
எந்தக் குழந்தையும் 
இப்படி ஒரு சிறை வண்டியில்
ஏறிவிடக்கூடதென.

தாயின் சடலத்தின் பின்
கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன்
எந்தக் குழந்தையும் 
இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு
கொள்ளி சுமக்கக்கூடாதென.

காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு
விலங்கிடப்பட்ட கைகளால்
அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன்
எந்த ஒரு துணைவனுக்கும்
இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு  
நிகழ்ந்துவிடக்கூடாதென.

இரத்தச்சுவடுகளின்றி
துப்பாக்கிச் சத்தளின்றி தகர்ந்துபோனதொரு வீடு
குறுக்கும் மறுக்குமாக
பின்னப்பட்ட கம்பிகளினுள் சிறையிருக்கும்
பயங்கரவாதியின் மகள்
எண்ணிக் கொண்டாள்
ஒரு சிங்களக் குழந்தைக்கும்
இந்த நிலை நேர்ந்துவிடக்கூடாதென.

O தீபச்செல்வன் 


புதன், 28 பிப்ரவரி, 2018

ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை



தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன்
வீதியில் செல்கையில்,
சலவை தூளால் தோய்த்து
உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத
வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி
நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை,
திருடன் என்றோம்
மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த
வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு.
தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை
இரண்டு கவளம் அரிசிக்காக
குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம்.
கனிகளை எமக்குப் பரிசளித்தவனை
ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி
கனிகளை எமக்குப் பரிசளித்தவனின்
உடலைக் கிழித்து
பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்டோம்
ஒரு வாழைப்பழத் துண்டையும்
சில காட்டுப் பழங்களையும்.மீந்திருந்ததுவோ பூமியை இழந்த
ஆதிவாசியினது இருளும் பசியும் படிந்த கண்களும்
கோதுமை என சந்தேகிக்கப்பட்டு
தேகம் எங்கும் அப்பியிருந்த
அழுக்கு எனப்பட்ட வனப் புழுதியும்.

- தீபச்செல்வன்

கேரளாவில் அருசி திருடியதாக கூறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மதுவுக்காக

திங்கள், 27 நவம்பர், 2017

இனி எம் கல்லறைகளுடன் பேசுக!



எம் இருதயத்தை பிளந்த
யுத்தக் கல்லை பார்த்ததுபோதும்
எமை கொன்று வீசிவிட்டு
வெற்றிக் கூச்சலிடும்
உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்
எம் தேசமழித்து
அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே
ஒற்றை நாடென நடனமாடும்
வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.
எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு
வருகவெம் சிங்களச் சகோதரர்களே!
வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும்
நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய
பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும்
மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன்
போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும்
மாண்டவர்களின் துயில் கலைத்து
உறங்க இடமறுத்த மாண்பை பார்க்கவும்
சற்று அமர்ந்தே
எங்கள் கல்லறைகளுடன்
பேசுக எம் சிங்கள சகோதரிகளே!
உடைபட்ட கல்லறையின் துகளொவ்வொன்றும்
எம் தாகம் எடுத்துரைக்கும்
எம் தலைமுறையின் கனவைச் சுமந்திருக்கும்

-தீபச்செல்வன்


செவ்வாய், 21 நவம்பர், 2017

கத்தலோனியா மூதாட்டி






தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி ஒருபோதும் உங்கள் பாடல்களைப் பாட முடியாது' என்ற
ஸ்பானிய அரசனின் வார்த்தைகளை எழுதிய
பழைய நாட்குறிப்பை தன் கைப்பையில் வைத்திருந்த அந்த மூதாட்டி
'மகளே! மாண்டுபோன பின்னர் எழும் நினைவுக்கல்லில்
எழுதுவதற்கு மாத்திரம் உரியதல்ல எம் தாய்மொழி!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி உலகில் ஒரு நாடு சாத்தியமில்லை' என
பிலிப் மன்னன் எக்காளமிடுகையில்
பொக்கை வாய் நிறைய சிரித்த அந்த மூதாட்டி
'மகனே! வஞ்சிப்பவர்களின் கைகளில்
ஐக்கியத்தின் வாசனை இருப்பதில்லை
நம்முடைய பூர்வீக இராட்சியமே பாரபட்சத்தின் முடிவு!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

சுதந்திரத்தைத் தவிர
எதனாலும் பெறமுடியாத புன்னகைகயை கொண்டிருக்கும்
ஒவ்வொரு கத்தலோனிய முகங்களிலும்
இன்னும் துடிதுடிப்போடு திரியும் அந்த மூதாட்டி
'புதல்வர்ககளே! நாம் ஸ்பானியர் அல்ல, கத்தலோனியர்
என்பதை வரலாறு மறந்து போனால்
உம் குழந்தைகளின் பெயர் அகதி என்றே முடியும்' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.


♢ தீபச்செல்வன்

நன்றி: கல்கி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வீர நாய்கள்



எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி
மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும்
அழைக்கப்படும்போதெல்லாம்
சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும்
எனது வீடுகளில் எந்த வேளையிலும்
சோதனைகள் நடத்துவதையும்
அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி
என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும்
எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும்
எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும்
எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன்
பார்த்துச்செல்லும்போதும்
துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின்
மரணத்தின் சந்தேகத்தையும்
இன்னுமின்னும் எல்லாவற்றையும்
சகிக்கப்பழகிவிட்டேன்
எத்தனையோ தடவை ரோந்து சென்றுவிட்ட பின்னும்
இராணுவத்தைப் பார்த்து குரைக்கும்
என் வீட்டு நாயிற்க்குத்தான்
இன்னும் சகிக்கத் தெரியவில்லை.

தீபச்செல்வன்

நன்றி: குங்குமம்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லெப்டினன் மாலதி


பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா

ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை
உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை
எழுந்தாள் தேசம் காக்க
தரித்தாள் ஆயுதம்

கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி
தொண்டைக்குழியில் நஞ்சு
'என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!'
என்றுரைத்த அவள் இறுதிக் குரல்
இன்னும் ஓயவில்லை

போருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்
தொடுத்தனர் போர்
அழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்
அழித்தனர் எமை

பாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்
களத்தில் அவள் மாண்டுபோகையில்

உம் கைகளிலிருந்த துப்பாக்கிகளில்
அசோகச் சக்கரம்
அமைதிப் படைகளின் முகத்திரையை
கிழித்தெறிந்தாள் முதல் சுடுகலனில்

வானமே கரைந்துருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்டது
முதல் விதை.
0

தீபச்செல்வன்

10.10.1987 தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து ஆயுதம் ஏந்திக் களம் சென்று போரிட்டு மாண்ட மாலதி என்று அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற முதல் பெண் புலிக்காய்.

திங்கள், 2 அக்டோபர், 2017

குர்து மலைகள்


பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்

குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்

லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.

ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.

●தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

கடல் மகள்




தாமரைபோல் விரியும் அலைகளை
கண்களில் கொண்ட கடற்கன்னி
தம்மை விடவும்
வேகமாய் நீந்தி புன்னகையுடன்
வெடிக்கையில்
கலங்கின மீன்கள்

யாருக்கும் அஞ்சா ஈழக் கடலே
ஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்
உனக்காய் வெடிசுமந்தாள்
உன்னில் புதைந்தாள்
புத்திர சோகத்தால் உடைந்த தசரதன்போல்
விம்மிற்றுக் காங்கேசன்துறை

தீவை விழுங்க வந்த பருந்தின்
கால்களை முறித்தாள் அங்கயற்கண்ணி
தாயாய் உருகியது வேலணை

இலக்கை தகர்க்காது
திரும்பேன் எனப் போர்க்கோலம் பூண்டவள்
கடலோடு கலந்துபோகையில்
சீறிய அலைகளும்
கரைந்து புரண்டன

நுணலை விழுங்கும் சர்ப்பம்போல
கடலினை குடிக்க வந்த எதிரியின் படகை
கரைத்து
கடலுக்கு முத்தமிட்டாள் அங்கயற்கண்ணி
கடல் அணைத்தது தன் மகளை.
0

அங்கயற்கன்னிக்காய்
தீபச்செல்வன் 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...