Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்


இப்படித்தான் கொடுமையான இரவுகளையே
எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று.
காலை என்றாலும் உன்னை
நெருங்கிவிட முடியவில்லை.
எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக
செய்துகொண்டிருக்கிறோம்.
உன்னை தனியே விட்டுச் செல்லுகிற
என் தாய்மையைப் பற்றி
என்ன சொல்லி அழுகிறாய்!
அந்த வெளியில்
கலந்து கிடக்கிற தாலாட்டுகள்
உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன்.

அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக
சொல்லுகிறார்கள்.
வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த
பயணத்தின் இடையில்
ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான்
இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம்.
தூங்க மறுத்து
அழுது களைத்துப்போய் காலையில்
சூரியனை காணாது தூங்கிக்கொண்டிருக்கிறாய்.
நினைத்தபடி எங்கும் செல்ல முடியாது
என்பதால் உன்னை கொஞ்சம் பொறுக்கச்சொல்லுகிறேன்.

எனது கண்களும் கரைந்துகொண்டிருக்கின்றன.
என்னை மறந்து
தூங்கும்பொழுது மீளவும் உன்னிடம் வந்து
என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ள
துர்பாக்கியத்தில் நானிருக்கிறேன்.
இங்கு தோள்களில் பிள்ளைகளை அவர்கள் போட்டுக்கொண்டுதான்
புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கூடவே தங்கள் துணைகளையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஏன் நம்மை பிரித்து விட்டார்கள்.
இந்த இரவு மிகவும் கொடுமையாக
நீண்டுகொண்டே உன்னை தூரமாக்கிச் செல்லுகிறது.

நானும் உன்னைப்போலவே தூங்க மறுத்துக்கிடக்கிறேன்.
பால் சுறந்து வடிந்துகொண்டிருக்கிறது
மனம் கொதித்து அறைக்குள் அலைந்துகொண்டிருக்கிறேன்.
மகளே இப்படித்தான்
நாங்கள் எப்பொழுதும் பிரிக்கப்படுகிறோம்.
எப்படி நீ அருகில் இருக்கிறாய் என்றும்
நான் உன் அருகில் இருக்கிறேன் என்றும்
சொற்காளால் சமாளிக்க முடியும்?
நான் வெகு தூரத்திற்கு வந்திருக்கிறேன்.

எங்கோ ஒரு கூடாரத்தில் அழுகை படிந்து கிடக்கிற
உனது முகத்தை யார்தான் காட்டமுடியும்?
பல்வேறு விடயங்களுக்காக
குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்.
நாளையும் விரைவாக வருகிறது.
எப்படி மீளவும் உனக்கு பதில் அனுப்பப்போகிறேன்.
அவர்கள் உன்னை கொண்டு வந்து தருவதாவே சொல்லுகிறார்கள்.
நான் சொன்னபடி
நிறைவே பொறுத்து உனக்கு தொண்டையடைத்துப்போயிருக்கிறது.
அவர்கள் சொல்லுவதைத்தானே சொல்ல முடியும்!

இவை கொடுமையான இரவு என்பதை
நான் சொல்லாமலே அறிந்து வைத்திருப்பாய்.
உனது அழுகை மிகச் சமீபமாகவே கேட்கிறது.

இன்னும் உன்னை பொறுத்துக்கொள்ளச் சொல்லுவது
எவ்வளவு இரக்கமற்ற வார்த்தைகளாக இருக்கும்!
உன்னை தூங்க வைத்து
அசைத்துகொண்டிருக்கும் மடிகளால் நிறைந்து கிடக்கிறது
என் கனவு .
எல்லாக் குழந்தைகளும்
எதோ ஒன்றின் நிமித்தம் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்.
o

தீபச்செல்வன்

03.09.2009 

முள்வேலித் தடுப்பு முகாமில் மாணவர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட சமயத்தில் ஒரு வயதான தனது குழந்தையை கணவருடன் விட்டுப் பிரிந்துவர நேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி தனது குழந்தையை தன்னிடம் சேர்த்து விடும்படி கோரினார்.


9 கருத்துகள்:

செம்மதி சொன்னது…

எல்லாம் நிற்பந்தத்திற்காகவே செய்ய வேண்டியதாகவே உள்ளது யதார்த்தம் தீபச்செல்வன் நாங்கள் இப்படியேதான் வாழ்து சாகப்போகின்றோமோ என்ற யோசனை என்னையும் தொட்டிருக்கிறது. திருமணம், உறவுகளின் பிரிவு ,எங்கு இருப்பது , எதை யெல்லாம் பேச வேண்டும் போன்றவை அதிகார வர்க்கத்தினால் தானே தீர்மானிக்கப்படுகின்றன-------??????? ....செம்மதி.....

உமா சொன்னது…

ஐயோ! இக் கொடுமைகளை படிக்கவும் மனது கொதிக்கிறதே. 21 ஆம் நூற்றாண்டின் மனிதர்கள் தானா இவர்கள். கற்கால விலங்கினங்களிலிருந்து மாறாதவர்களா? இன்றய உண்மை நிலையை தங்கள் கவிதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உணரவேண்டியவர்கள் தான் இன்னும் இருட்டிலேயே உள்ளார்கள்.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

:)

தோழன்
பாலா

Nathanjagk சொன்னது…

இந்தத் தீபத்தை அடையாளப்படுத்திய வகையில் தமிழ்மண விருதுக்கு நன்றி ​சொல்லிக்​கொள்கிறேன்.

நிகழின் ஆழத்தை உணர​வைக்கிறது. வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்!

Theepachelvan சொன்னது…

அன்பிற்குரிய பாலபாரதி, ஜெகநாதன், ராமலஷ்மி

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பான நன்றிகள்... இந்த விருதை தந்த தமிழ்மணத்திற்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

Theepachelvan சொன்னது…

‘குழந்தைகள் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்’ - கவிதைக்கு தமிழ்மணம் விருது

http://deebamnews.blogspot.com/2010/01/blog-post_20.html

பெயரில்லா சொன்னது…

தமிழ்மணம் விருதுபெற்ற தங்களை ”டிஸ்கவரி புக் பேலஸ்” வழ்த்துகிறது.

சசிகலா சொன்னது…

கவிதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மிகவும் அருமை

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...