o தீபச்செல்வன் ----------------------------------------
குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றன
பதற்றங்களை கண்டு அதிரும்
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம்
முகம் கோணலாகி உடைகிறதுஅவர்களின் புன்னகையை பார்ப்பவர்களில்லை
அவர்களின் வார்த்தைகளை கேட்பவர்களில்லை.அந்தச் சிறுவன் பணத்திற்காக கழுத்து நெரித்து
கொல்லப்பட்ட நகரத்தில்
அவனின் குருதி படர்ந்த தெருவில்
நான் எப்படி அமைதியாக திரிவது?
அம்மா ! ஏன் என்னை இந்த மண்ணில் பெற்றிருக்கிறாய்?
யாரிடமும் கருணையில்லை
இரத்தமும் வன்மமும் படிந்த முகங்களுடன்
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்னைச் சுற்றிலும்
மனிதர்களை தின்று களிக்கும் மிருகங்கள் அலைகின்றன
மிருகம் கவர்ந்து சென்ற நண்பனைப்போல
நான் ஏனம்மா இருக்கிறேன்?
கருணைக்காக தவிக்கும் குழந்தைகள்
எனக்கு முன்னால் செல்லுகின்றனர்
பிள்ளைகளுக்காக துடிக்கும் தாய்மார்கள்
என்னோடு பேசுகின்றனர்
அம்மா ஏன் என்னை இந்த மண்ணில் வளர்த்தாய்?
குழந்தைகளை இழுத்துச் செல்பவர்கள் என்னையும்
ஒரு இரவில் துப்பாக்கிகளால்
இழுத்துச் செல்ல முடியும்
உன்னையும் என்னையும் குறித்து யாரும் பேசுவதாயில்லை?
தங்கள் கோப்பைகளை குறித்தும்
தங்கள் வீடுகளைக் குறித்தும்
தங்கள் வண்டிகளைக் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள்
அம்மா ஏன் வன்மம் நிறைந்த
மண்ணில் என்னை நடமாட வி;ட்டிருக்கிறாய்?
பூக்களை பார்க்க இன்னும் எதை நாம் இழக்க வேண்டும்?
துப்பாக்கிகளால் இருதயத்தை குத்திக்கொள்ளும் காலம்
ஏன் இன்னும் விரட்டுகிறது?
அமைதியான இரவில் இந்த நகரத் தெருவொன்றில்
நடந்து வர ஆசைப்படுகிறேன்
வெளிச்சங்களில் மகிழ்ச்சியுடன் உலவ விரும்புகிறேன்.
அம்மா அழகான வாழ்வு எப்படியிருக்கும்?
மகிழ்ச்சிக்கான ஏக்கங்கள் கனவாய்ப்போகின்றன
காலம் எல்லா வகையிலும் பிழைத்துப்போய்க்கிடக்கிறது
நீ இன்னும் வெயிலில் கிடந்து காய்கிறாய்
எங்களுக்காய் யாரம்மா இருக்கிறார்கள்?
____________________
நன்றி : ஆனந்தி
புகைப்படம் : அல்லாரை தடுப்பு முகாமில் 04.06.2010 அன்று எடுத்திருந்தேன்
1 கருத்துகள்:
அம்மாவும் என்ன செய்வாள் தீபச்செல்வன்
கவிதை இதயத்தை சாகடிக்கிறது நண்பா
வெட்டப்பட்ட மரங்கள் துளிர்க்கும் காலத்தை எதிர்நோக்குகிறேன்
கருத்துரையிடுக