தீபச்செல்வன்
நிலமும் உயிர்களும் உறக்கமற்றலைகிற
காலத்தில்; நீ உறங்காதிருக்கிற இடத்தை நானேறிவேன்
விதைகள் நிறைந்த நிலத்தை
நிலம் தின்னும் பெருங்கால்கள் மிதிக்கின்றன
உன்னைப்போலவே எல்லோரும்
உயிரோடு புதைக்கப்பட்டவர்கள்
அதனால் இந்த நிலம் இடையிடையே துடித்தசைகிறது
இரத்தமும் கண்ணீரும் கனவும் காதலும்
எல்லா இடங்களிலும் கசிகிறது.
நீ உறங்கா நிலத்தில் பேய்கள் பசியோடு அலைகின்றன
நிலத்தை கொள்ளையிட்டு
வண்டிகளில் வெட்டி ஏற்றிக் கொண்டு போகும் இரவில்
நீ என்ன செய்வாய்?
என்னைக் குறித்து நீ வைத்திருக்கும்
வார்த்தைகளை என்ன செய்வாய்?
உன் கூந்தல் முடிகள்
நிலத்தில் கலந்து எப்பொழுதும் பறக்கின்றன.
உன்னை முத்திமிட துடிக்கும் தருணங்களில்
நீயும் நானும் கலந்த நிலத்தை முத்தமிடுகிறேன்
வாழ் நிலத்தின் கீழாய் நீ என்னை தேடி அலைகிறாய்
அங்கு தெருக்கள் இருக்கின்றனவா?
நமது பிரியத்தை பகிரும் வெளிகள் உள்ளனவா?
குருதியில் உறைந்திருக்கிற
நம் பெருங்கனவைப்போல நமது காதலும் உயிரோடிருக்கிறது
நம் காதலைப்போல கனவுக்கும் மரணமில்லை
நான் உன்னை மணல்வெளிகளை கிளறியும்
சிறுகடலில் மூழ்கியும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
தோல்வியின் பின்னரான பிரிவின் தனிமை
என்னைக் கொல்லும் இருளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது
உன் முத்தங்களில்லாத காலத்தில்
எனது வானம் இருண்டு கிடக்கிறது
உன்னைக் குறித்து
நமது நகரமும் நிலமும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
கனவு மக்களின் தாகங்களுடன்
நமது முத்தத்தின் ருசியையும் இந்த நிலமறியும்
உறங்காத நிலம் மீண்டும் முளைப்பேன் என்கிறது
கனவோடு காலத்தோடு பொழுதுகளுடன்
மீண்டும் நீ காதல் நிலத்திலிருந்து முளைப்பாயா?
___________________
நன்றி : அம்ருதா
3 கருத்துகள்:
//உன்னைக் குறித்து
நமது நகரமும் நிலமும் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
கனவு மக்களின் தாகங்களுடன்
நமது முத்தத்தின் ருசியையும் இந்த நிலமறியும்
உறங்காத நிலம் மீண்டும் முளைப்பேன் என்கிறது //
அருமை..வாழ்த்துக்கள்.வலியை உண்ர்கிறேன்.
yr writting + mind r very good.
continue it for tamils future
http://muthtu.blogspot.com/2011/07/blog-post.html
very good.
http://muthtu.blogspot.com/2011/07/blog-post.html
கருத்துரையிடுக